சசிகலாவை விடுங்க.. அமமுகவை "கவனியுங்க".. டெல்லியிலிருந்து வந்த "ஆஃபர்"?.. அதிமுக ஏற்குமா?
சென்னை: அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து அக்கட்சியில் பலர் ஆதரித்தும் எதிர்த்தும் போர்க் கொடி உயர்த்தி வருகிறார்கள். இதனால் சசிகலாவும் மகிழ்ச்சியாக அடுத்த கட்ட நகர்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.
தேனி மாவட்டத்திலிருந்தே சசிகலாவுக்கான ஆதரவு குரல் எழுந்ததால் மிகவும் உற்சாகமடைந்த அவர் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஆதரவு குரல்
இவரது சுற்றுப்பயணம் குறித்தும் இவருக்கான ஆதரவு குரல் குறித்தும் உளவுத் துறை தரப்பில் டெல்லி மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சசிகலாவை இப்போது அதிமுகவில் சேர்க்க வேண்டாம் என டெல்லி மேலிடம் தெரிவித்துவிட்டதாம். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதால் எந்த பலனும் இல்லை என்பதுதான் மேலிடத்தின் எண்ணமாக உள்ளதாம்.

ஜெயலலிதா
ஜெயலலிதா அதிமுகவை தலைமையேற்பதற்கு முன்னர் தேர்தலை சந்தித்து எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தார். பின்னர் ராஜ்யசபாவுக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்கு அவரது மனைவி ஜானகி ராமசந்திரனுடன் போராடி 1989 ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக உயர்ந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்
அதன் பின்னர் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார். பின்னர் அவரது அரசியல் வெற்றி அனைவரும் அறிந்ததே. ஆனால் சசிகலா அப்படியில்லை, ஜெயலலிதாவுடனே இருந்தாலும் அவருக்கென செல்வாக்கு என்னவென இதுவரை அவர் நிரூபித்ததில்லை. நிரூபிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வாறிருக்கும் போது சசிகலாவை தலைமை பதவியில் அமர்த்துவது சரியாக இருக்காது என டெல்லி மேலிடம் கருதுகிறதாம்.

சசிகலா வேண்டாம்
சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு பதிலாக டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்தால் நிச்சயம் அவரால் அதிமுகவுக்கு பயன் ஏற்படும். அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியதும் குக்கர் சின்னத்தை கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவை ஓரங்கட்டிவிட்டு சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.

வாக்கு சதவீதம்
2018இல் அமமுக என்ற கட்சியை தொடங்கிய தினகரன் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாவிட்டாலும் 5.46 சதவீத வாக்குகளை பெற்றது அவரது கட்சி. அது போல் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் 2.36 சதவீத வாக்குகளை பெற்றது. 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அமமுக வென்று பேரூராட்சி தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை பிடித்தது.

பாஜக கூட்டணி
நகர்ப்புற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி இல்லை என்றாலும் தேசிய அளவில் கூட்டணி தொடரும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். எனவே வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவை இணைத்துக் கொண்டு அவர்களுக்கு கணிசமான லோக்சபா தொகுதிகளை ஒதுக்கலாம் என மேலிடம் விரும்புகிறதாம். ஆரம்பத்திலிருந்தே தினகரன் மீது டெல்லி மேலிடத்திற்கு சாப்ட் கார்னர் இருந்து வருகிறது.
Recommended Video

அதிமுக முடிவு என்னவோ
ஆனால் அதிமுக இதற்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அவர்களுக்கு டிடிவி தினகரனை கட்சியில் இணைப்பதோ கூட்டணி வைப்பதோ பிடிக்கவில்லை. இதனால் டெல்லி மேலிடத்தின் பரிந்துரையை அதிமுக தலைமை ஏற்குமா இல்லை நிராகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications