சென்னைக்கு வருது அம்ரித் பாரத் ரயில்.. எந்த ரூட்டில் தெரியுமா? பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
சென்னை: சென்னை ஹவுரா இடையே அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மொத்தம் 1,622 கிலோ மீட்டர் தூரம் இந்த ரயில் செல்கிறது. இந்த ரயில் எப்போது இயக்கப்படும், மொத்த டிராவல் நேரம் எவ்வளவு, கட்டணம் எவ்வளவு என்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் 50 அம்ரித் பாரத் ரயில்களை நடப்பு நிதியாண்டில் அறிமுகம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. அம்ரித் பாரத் ரயில்களை பொறுத்தவரை சாமானிய பயணிகள் செய்யும் வகையில் மலிவான கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மொத்தம் 50 ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், சென்னைக்கு ஒரு ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னைக்கு அம்ரித் பாரத் ரயில்
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 1,622 கிலோ மீட்டர் தூரம் இந்த ரயில் செல்கிறது. ஹவுராவில் இருந்து சென்னைக்கு வர 26 மணி நேரம் ஆகுமாம். விசாகப்பட்டினம் வழியாக இந்த ரயில் இயக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
கரக்பூர், பலேஸ்வர், பத்ராக், கட்டாக், புவனேஷ்வர், குர்தா ரோடு சந்திப்பு, விஜயநகரம், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா சந்திப்பு, தெனாலி சந்திப்பு, ஓங்கோல் மற்றும் கூடூர் சந்திப்பு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் எனவும் ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன.
எப்போது புறப்படும்?
வாரத்திற்கு இரண்டு முறை இந்த ரயில் இயக்கப்படும் அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தை இந்த ரயில் எட்டுமாம். இந்த அம்ரித் பாரத் ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ், பொது பெட்டிகள் இருக்கும். ஹவுராவில் இருந்து சென்னைக்கு ஸ்லீப்பர் கிளாசில் ரூ. 800 கட்டணமாக இருக்கும். ஹவுராவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணியளவில் சென்ட்ரலுக்கு வந்து சேரும் எனவும் மறுமார்க்கத்தில், சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு ஹவ்ராவிற்குஅடுத்த நாள் இரவு 8.30 மணிக்கு சென்று அடையும் என்று சொல்லப்படுகிறது.
எனினும், ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட பிறகுதான் இதை உறுதி செய்ய முடியும். வட மாநில தொழிலாளர்கள், வெளி மாநிலங்களுக்க்கு செல்லும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த அம்ரித் பாரத் ரயில் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
அம்ரித் பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்
சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் அனைத்து தரப்பினரும் பயணிக்க கூடிய பொதுப் போக்குவரத்து என்றால் அது ரயில்கள்தான். ரயில்களின் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. வந்தே பாரத், வந்தே பாரத் ஸ்லீப்பர் வரிசையில் அம்ரித் பாரத் ரயில்களையும் இயக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் கொஞ்சம் அதிகம் என்பதால் நடுத்தர வசதி கொண்ட மக்களும் சாமானிய ஏழை எளிய மக்களும் அதில் பயணம் செய்ய கொஞ்சம் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், தான் மலிவான கட்டணத்துடன் நவீன வசதிகள் கொண்ட அம்ரித் பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டது. இதன்படி, அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பில் நடைபெற்று வந்தது.
ஏசி வசதி இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய அம்ரித் பாரத் ரயில்கள் உத்தர பிரதேசம், பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், அதிக வழித்தடங்களில் இந்த அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications