"ரூ.110 கோடி!" சென்னை ஐஐடிக்கு அள்ளி கொடுத்த முன்னாள் மாணவர்! யார் இவர்? எதற்காக இத்தனை கோடி நன்கொடை
சென்னை: சென்னை ஐஐடி பல்கலைக்கழகத்திற்கு ஒரே ஒரு முன்னாள் மாணவர் மட்டும் 110 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார். இவ்வளவு பெரிய நன்கொடையைக் கொடுத்த அந்த நபர் யார்.. அவர் எதற்காக நன்கொடை கொடுத்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி.. இங்கு படித்த பல மாணவர்கள் இப்போது பல துறைகளில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள்.

இதற்கிடையே சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் ஒருவர் மட்டும் தான் படித்த கல்லூரிக்கு ₹110 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவர் எதற்காக இதைச் செய்தார்.. யார் அந்த முன்னாள் மாணவர் என்பது தொடர்பான தகவல்களைப் பார்க்கலாம்.
என்ன காரணம்: ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் குறித்த பள்ளியை ஆரம்பிக்க இந்த நன்கொடையை அவர் கொடுத்துள்ளார். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐஐடி இயக்குநர் வி. காமகோட்டிக்கும், ஐஐடி முன்னாள் மாணவரான சுனில் வாத்வானிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தானது.
யார் இவர்: 1974ஆம் ஆண்டு ஐஐடியில் படித்த மாணவர் தான் சுனில் வாத்வானி.. இவர் ஐகேட் மற்றும் மாஸ்டர்டெக் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இது தொடர்பாக சுனில் வாத்வானி கூறுகையில், "டேட்டா அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் இப்போது உலகம் முழுவதும் உள்ள துறைகளை மாற்றத் தொடங்கியுள்ளன.
இதனால் ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் தொடர்பாக மாணவர்களுக்குச் சொல்லித் தரத் தனி கல்வி நிலையம் வேண்டும் என்று நான் நினைத்தேன். அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ள இந்தியா சரியான நடவடிக்கையை எடுத்தால் ஏஐ மற்றும் அது சார்ந்த துறையில் முக்கிய இடத்தில் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
திட்டம் என்ன: இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், "சரியான நேரத்தில் தேவையான நிதியுதவி வந்துள்ளது. சுகாதாரம், விவசாயம், நகர மேம்பாடு, உற்பத்தி மற்றும் நிதி சார்ந்த தொழில்நுட்பங்கள் என்று பல்வேறு துறைகளை ஏஐ மூலம் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஏஐ மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் என்ற பிரிவில் முதல்முறையாகப் பாடப்பிரிவை ஆரம்பிக்கிறோம்.
இந்தாண்டு ஜூலை மாதம் முதல் இந்த பிரிவில் பாடங்களை ஆரம்பிக்க உள்ளோம். அடுத்த மூன்று - நான்கு ஆண்டுகளில், இத்துறையில் 50 ஆசிரியர்களும் 500 மாணவர்களும் இருப்பார்கள், தற்போது இதில் 9 துறைகளைச் சேர்ந்த 15 பேராசிரியர்கள் உள்ளனர்" என்றார். இந்தப் பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை ஜேசிசி தேர்வு மூலம் இருக்கும் எனத் தெரிகிறது.
பாடப்பிரிவுகள்: இப்போது ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய பாடப்பிரிவில், பிடெக், எம்டெக்., எம்எஸ், பிஎச்டி ஆகிய பிரிவுகளில் மாணவர் சேர்க்கை இருக்கும். மேலும், பிரிட்டன் பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு முதுகலை பாடத்தையும் இவர்கள் வழங்குகிறார்கள்.
வாத்வானியின் குடும்ப அறக்கட்டளையான வாத்வானி இம்பாக்ட் டிரஸ்ட் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளது. இவர்களின் வாத்வானி இன்ஸ்டிடியூட் ஆஃப் சஸ்டைனபிள் ஹெல்த்கேர் மற்றும் வாத்வானி இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications