மகளுக்கான பாசப்போராட்டம்..ஒரு போலீஸ்காரனா என்னதான் பண்ணுவேன்?கதறிய கான்ஸ்டபிள்!பறந்த அதிரடி உத்தரவு
சென்னை: அரசு மருத்துவமனையில் தனது மகளுக்கு தவறான சிகிச்சையளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தலைமை காவலர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடசென்னையின் ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் கோதண்டபாணி. இவருக்கு 10 வயதில் பிரதிஷா எனும் மகள் ஒருவர் இருக்கிறார். பிரதிஷாவுக்கு 3 வயது முதல் சிறுநீரக கோளாறு இருந்ததால் எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக சிகிச்சையின்போது அரசு மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்த பிரதிஷாவுக்கு கால் பாதத்தில் திடீரென கடுமையான அரிப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் அரிப்பு பிரச்னையை தாங்க முடியாமல் சிறுமி சிரமப்பட்ட நிலையில் மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுநீரக பிரச்னைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவாகதான் இந்த அரிப்பு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். எனவே இதற்காக சிகிக்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிறுமியின் கால்களும் கறுப்பு நிறத்தில் மாறியுள்ளன. மட்டுமல்லாது உடலில் உள்ள ரத்தமும் கெட்டுப்போயுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுநீரக பிரச்னைக்காக மருத்துவமனைக்கு வந்த சிறுமி இப்படி ஆனதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சைதான் காரணம் என்று ஹெட் கான்ஸ்டபிள் தண்டபாணி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்திருக்கிறார். எனவே இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகளிடமும், தலைமை செயலகத்திலும் மனு கொடுத்திருக்கிறார்.
ஆனால் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மறுபுறம் சிறுமி பிரதிஷாவுக்கு தந்தை கோதண்டபாணியின் அனுமதியின்றி டயாலிஸிசும் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் சிறுமி வலிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அவர் தனது மகளுடன் கொதிக்கும் வெயிலில் தலைமை செயலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஏற்கனவே சென்னை ராணிமேரி கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண மூட்டு வலிக்காக மருத்துவமனைக்கு வந்த அவருக்கு முதலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் கால் சரியாகாததால் ஒரு கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் எழுப்பியிருந்தன.
இந்நிலையில் தற்போது ஹெட் கான்ஸ்டபிள் ஒருவரே நேரடியாக ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தியிருந்தது மீண்டும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இதனையடுத்து ஹெட் கான்ஸ்டபிள் கோதண்டபாணியின் புகாரை பெற்றுக்கொண்ட ஓட்டேரி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு பரிந்துரைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications