கருப்பா இருக்கியே.. உன் கிட்ட எப்படி வாழறது? பரிதாப கணவரும், பயங்கர மனைவியும்! உடைந்த 6 வருட ரகசியம்
சென்னை: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள ஒரு கொலைச் சம்பவம், தற்போது அந்தப் பகுதியையே உலுக்கி எடுத்துள்ளது. ஆரம்பத்தில் கொள்ளை முயற்சி என நம்பப்பட்ட இந்த விவகாரம், காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஒரு திட்டமிட்ட படுபாதகச் செயலாக உருவெடுத்துள்ளது. ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சலா? என்று அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. என்ன நடந்தது?
தார் மாவட்டத்தில் உள்ள கோண்டிகேடா கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா.. இவர் சம்பவம் நடந்த அன்று, பதற்றத்துடன் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் தனது வீட்டிற்குள் புகுந்து, தன்னைத் தாக்கிவிட்டு, தனது கணவர் தேவகிருஷ்ணாவை ரத்த வெள்ளத்தில் கொலை செய்துவிட்டதாகக் கூறி அழுதார்.

வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிக்க வந்தவர்கள்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என்றும் அழுது புரண்டார்.. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீடு கலைந்து கிடப்பதையும் பிரியங்கா அழுது கொண்டிருப்பதையும் பார்த்து முதலில் அதை உண்மை என்றே நம்பினர்.
சந்தேகத்தை கிளப்பிய ஒரு வார்த்தை
ஆனால், போலீசார் தீவிரமாக விசாரணையைத் தொடங்கியபோதுதான் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கினன. உயிரிழந்த தேவகிருஷ்ணாவின் குடும்பத்தினரிடம் பேசும்போது, தம்பதியினருக்கு இடையே நீண்ட நாட்களாகவே சுமூகமான உறவு இல்லை என்பது தெரியவந்தது. குறிப்பாக, பிரியங்கா தனது கணவரைப் பார்த்து அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை போலீசாருக்குப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது.
"நீ கருப்பாக இருக்கிறாய், நான் உன்னை விட அழகான, சிறந்த ஒருவருக்கு தகுதியானவள்" என்று பிரியங்கா தனது கணவரை தொடர்ச்சியாக அவமானப்படுத்தி வந்தாராம்.. தனது கணவரின் நிறம் பிடிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, அவர் பலமுறை விவாகரத்து கேட்டும் தகராறு செய்திருக்கிறார்.
கள்ளக்காதலும் கூலிப்படை ஒப்பந்தமும்
அதுமட்டுமல்ல, தொடர் விசாரணையில், பிரியங்காவிற்கு 2020-ஆண்டு முதல் கமலேஷ் என்ற நபருடன் ரகசியக் காதல் உறவு இருந்தது அம்பலமானது. தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட பிரியங்காவும் கமலேஷும் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக கமலேஷ் தனது நண்பன் சுரேந்திராவை அணுகியுள்ளார். தேவகிருஷ்ணாவைத் தீர்த்துக்கட்ட ஒரு லட்சம் ரூபாய் பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இரவு, தேவகிருஷ்ணா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பிரியங்கா கதவைத் திறந்துவிட்டுள்ளார். உள்ளே புகுந்த கமலேஷும் சுரேந்திராவும் தேவகிருஷ்ணாவை நிலைகுலையச் செய்துள்ளனர். ஒருவர் அவரை பலமாக அழுத்திப் பிடிக்க, மற்றொருவர் கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தேவகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பீரோவில் தங்க நகைகள்
கொலைக்கு பிறகு, இது கொள்ளைக்காக நடந்த மரணம் என்று காட்டுவதற்காகப் பீரோவைத் திறந்து நகைகளைச் சிதறவிட்டு நாடகமாடியுள்ளனர். ஆனால், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகமும், குடும்பத்தினர் அளித்த வாக்குமூலமும் இவர்களின் மொத்த ரகசியத்தையும் உடைத்துவிட்டது.
இப்போது பிரியங்கா, அவரது காதலன் கமலேஷ் மற்றும் சுரேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு பெண்ணே தன்னுடைய கணவனை நிறத்திற்காகக் கொலை செய்யத் துணிந்த இந்தச் சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications