இருப்பது ஒரே வாழ்க்கை.. இதை செமயா வாழணுமா.. இதை பண்ணுங்க போதும்! ஆனந்த் சீனிவாசன் சூப்பர் ஐடியா
சென்னை: முதலீடு சார்ந்த டிப்ஸ்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும்படி ஈஸியாக விளக்குபவர் ஆனந்த் சீனிவாசன். இவர் முதலீடு, சேமிப்பு, கடன் இல்லாமல் வாழ்வது என பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார். இந்தச் சூழலில் இவர் சமீபத்தில் ஒருவர் தனது வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்.. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். அது குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். முதலீடு தொடர்பாக எளிய மக்களுக்கும் புரியும்படி விளக்கிப் புகழ் பெற்றவர் தான் இவர்.

குறிப்பாகத் தங்க முதலீடு, சேமிப்பு குறித்து இவர் தொடர்ச்சியாக விளக்கி வருகிறார். கடன் இல்லாமல் வாழ்வது, சேமிப்பு குறித்து விளக்குவதே இவரது ஸ்டைல். இதற்கிடையே இவர் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்பது குறித்து விளக்கி இருக்கிறார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
ஆனந்த் சீனிவாசன்: ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாகப் பேசுகையில், "நான் பல இடங்களில் சார்லி மங்கரை புகழ்ந்து பேசி இருக்கிறேன். அவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருந்துள்ளது. வாழ்க்கையில் அவர் படாத கஷ்டங்களே இல்லை. ஆனால், அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். ஒருவர் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் அவர் நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். இதை நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.
நம் அனைவருக்கும் ஒரு காலத்தில் வாழ்க்கை முடியும். அதுபோல வாழ்க்கை முடிந்தால் நம்மை பற்றிச் சுற்றி இருப்போர் பேசுவார்கள். பிரபலமான ஆளாக இருந்தால் செய்தித்தாள்களில் செய்திகளும் வரும். இதுபோல உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன பேச வேண்டும் என நினைக்கிறீர்களோ.. அதை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
எழுதிப் பாருங்கள்: அதாவது நான் போன பிறகு உலகம் என்னைப் பற்றி உலகம் இப்படி தான் பேச வேண்டும் என்பதை எழுதிப் பாருங்கள். உங்கள் குழந்தைகள், நண்பர்கள், உடன் வேலை செய்வோர் எப்படிப் பேச வேண்டும் என்பதை நினைத்து அதை எழுதிப் பாருங்கள். அந்த இலக்கை நோக்கிச் செல்லுங்கள். நாம் இன்று செய்யும் ஒரு தவறான காரியத்தால் வரும் காலத்தில் நம்மைப் பற்றி தவறாக பேசுவார்களா என்பதை நினைத்துப் பாருங்கள்.
நாம் உயிருடன் இருக்கும் போது நம்மை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நாம் போன பிறகு என்ன பேசுகிறார்கள் என்பதே முக்கியமாகும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் இன்றும் கூட அப்துல் கலாமை பலரும் கடவுள் போல வணங்குகிறோம். அவரை பற்றி நினைவு கூற அவரது குடும்பம், குழந்தைகள் எனக் கூட யாரும் இல்லை. அதேபோல காமராஜர் உயிரிழந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றும் கூட அவரை பார்க்காத தலைமுறை கூட அவரை கல்வி தந்தை எனக் கொண்டாடுகிறார்கள். நாம் வாழ்ந்தால் அதுபோல வாழ வேண்டும்.
இலக்கு: எனவே, இதுபோல நாம் எழுதி வைத்துவிட்டு அதை நோக்கி வாழ வேண்டும். அப்போது தான் நீண்ட தூர இலக்கு என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். வாழ்க்கையில் எது தேவை, எது தேவையில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்துவிடும். மேலும், வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்த இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்.
தப்பு செய்ய மாட்டோம்: நாம் பொதுவாக அன்றாட வாழ்க்கை குறித்து மட்டுமே யோசிப்போம். நீண்ட காலத்தை நோக்கி யோசிக்க மாட்டோம். இப்படி எழுதிப் பார்த்தால் அது மாறும்.. தவறு செய்ய மாட்டோம். ஒழுங்காக இருப்போம். குறுகிய கால ஆதாயத்திற்காக நாம் மோசமாக நடந்து கொண்டால் இந்த பூமி நம்மைப் பற்றி ஒழுங்காகப் பேசாது. எனவே, அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. கலாம், காமராஜர் போல இருங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications