வேலை போயிடுச்சா.. வீட்டுக் கடன், கார் கடன் இருக்கா.. என்ன பண்ணலாம்? ஆனந்த் சீனிவாசன் சொல்லும் ஐடியா!
சென்னை: அண்மைக் காலமாக உலகம் முழுக்கவே லே ஆஃப் என்று சொல்லப்படும் ஊழியர்களை வேலையில் இருந்து வெளியேற்றுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு மாறி வரும் பொருளாதார சூழல் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக டிசிஎஸ் போன்ற பெரு நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
அதேபோல் நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி அதிக ஊதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கும் கூட பணி பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இளைஞர்கள் பலரும் சிறிய ஊதியத்திற்கே பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். இதனால் இளைஞர்களை கொண்டு அதிக அனுபவம் கொண்டவர்களையும் நிறுவனங்கள் நீக்கி வருகின்றன.

இதன் காரணமாக ஊதியத்தை நம்பி ஏராளமான கடன்களை சாமானிய மக்கள் வங்கிகளில் இருந்து பெற்றுவிட்டு கட்ட முடியாத சூழலில் சிக்கி வருகின்றனர். இதுதொடர்பாக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், சுமார் ஒன்றரை லட்சம் பேர் வேலைகளை இழக்க போகின்றனர். ஏற்கனவே ஒரு லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு லட்சம் பேர் பாதிப்பை சந்திப்பார்கள் என்று கருதுகிறேன்.
இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் முதலில் பெரு நகரங்களில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்வது நல்லது. பணியில் இருக்கும் போதே உடனடியாக வொர்க் ஃப்ரம் ஹோம் கோரிக்கை வைத்து சொந்த ஊருக்கு சென்றுவிடுங்கள். இதன் மூலமாக நமது செலவுகளை குறைக்க முடியும். ஏனென்றால் பெரும்பாலான நிறுவனங்கள் 10 நாட்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டன.
சொந்த ஊருக்கு சொல்வதன் மூலமாக பள்ளிக் கட்டணம் தொடங்கி சாப்பாடு கட்டணம் வரை அனைத்தையும் குறைக்க முடியும். ஒருவேளை வேலையில் இருந்து நீக்கப்பட்டு விட்டாலும் கூட, சொந்த ஊரில் இருந்து வேலை தேடுங்கள். அதேபோல் வேலை இழந்த பின், கார் கடனில் வாங்கி இருந்தால், காரை உடனடியாக விற்றுவிடுங்கள். காரை விற்று கடனை முடித்துவிடுங்கள்.
பின்னர் சூழல் சரியான பின் நல்ல கார் வாங்கி கொள்ளலாம். லோன் இருந்தாலும், முடிக்க முயற்சி செய்யுங்கள். அதேபோல் வீட்டுக் கடன் வாங்கி இருந்தால், பிஎஃப் பணத்தை எடுத்துக் கூட முடித்துவிடுங்கள். முடிந்த அளவிற்கு கடன் ஜீரோவில் இருப்பது நல்லது. எப்போதும் பிஎஃப் பணத்தை எடுக்க கூடாது என்பேன். ஆனால் கடன் இருக்கும் போது பிஎஃப் மூலம் அதனை முடிக்க வேண்டும். மாதம் 1ஆம் தேதியானால் எந்தக் கடனும் கொடுக்க தேவையில்லை என்ற நிலைக்கு வருவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications