சென்னையில் மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. ஆனந்த் சீனிவாசன் போட்ட அதிரடி பதிவு
சென்னை: சென்னையில் தங்கம் விலை 24கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 6050க்கு விற்கப்படுவதாகவும், 22 கேரட் ஆபரண தங்கம் ஜிஎஸ்டி உடன் 5750க்கு விற்கப்படுவதாகவும் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்
நிதி நிபுணரான ஆனந்த் சீனிவாசன் கூற்றுப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் சுமார் 46000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் விலை சவரனுக்கு 48400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை 37 ஆயிரம் என்கிற நிலையில் சில வருடம் முன்பு இருந்தது. ஆனால் தற்போது ஜிஎஸ்டி உடன் சேர்த்து 46000 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நிலத்திலும்,தங்கத்திலும் தான் மக்கள் காசு போடுவார்கள், ரியல் எஸ்டேட் ஒரு நாள் ஏறும், மறுநாள் இறங்கும், ஆனால் தங்கம் அப்படி அல்ல, காலத்திற்கும் நிலையான பணம் கிடைக்கும். தங்கத்தை நாளைக்கே விற்றுவிட முடியும். அதை வாங்க பலரும் முன்வருவார்கள். ஆனால் நிலம் அப்படி, அந்த இடத்தின் தன்மையை பொறுத்து வாங்க வருவார்கள். சில நேரம் நிலத்தை நமக்கு தேவையான விலைக்கோ அல்லது வாங்கிய விலைக்கோ கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

தங்க மோகம்
இதனால் அந்த காலத்தில் தங்கத்தில் போட்ட காசு வீணாகாது என்று முன்னோர்கள் சொல்வார்கள். பெண்களுக்கு சொத்து சேர்க்கிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக தங்கத்தை சேர்த்துவிடுவார்கள் பெற்றோர். தன் வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்கு போகும் பெண்களுக்கு தங்கத்தைத்தான் சீதனமாக பெற்றோர்கள் போடுகிறார்கள். இன்றுவரை அந்த பாரம்பரியம் தொடர்கிறது. பெண்கள் விரும்பி அணிவது தங்கத்தை தான். தற்போது ஆண்களுக்கும் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. தங்க நகைகளை அணியும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மக்களுக்கு முதலீடு
தங்கத்தை அதிகம் வாங்க காரணம், அவசரத்திற்கு அடகு வைத்து பணத்தை புரட்ட முடியும். தங்கம் இருந்தால் தைரியமாக தொழில் தொடங்கலாம். வீடு கட்டலாம். தங்கத்தின் மீதான கடன் வட்டி மிகவும் குறைவு. எனவே மக்கள் தங்கத்தை முதலீடாகவும், வாழ்க்கையின் அங்கமாகும் பார்க்கிறார்கள். தங்கம் விலை சென்னையில் சட்டென தற்போது மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருவதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

46000 ரூபாய்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் 44,480 க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் விலை கிராமிற்கு 110 உயர்ந்து ஒரு கிராம் 5,560 க்கு விற்பனையகிறது. ஆனால் ஜிஎஸ்டி உடன் சேர்த்து ஒரு சவரன் 46000 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது என்று ஆனந்த் சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வங்கித்துறை
தங்கம் விலை உயர என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம். அமெரிக்க வங்கித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். பொதுவாக அமெரிக்காவில் நிதி முதலீடு ரீதியாக பாதிப்பு வந்தால் உடனே அவர்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். அப்படித்தான் பங்கு சந்தையில் இருந்து அவர்கள் மாறி தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்.

தங்கம் பாதுகாப்பானது
அதுமட்டுமின்றி சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவதாலும் தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவதாக நகை கடை அதிபர்கள் கூறியுள்ளனர். மேலும் பொதுமக்கள் மத்தியிலும் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பானது என நினைத்து தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதும் தங்கம் விலை உயர முக்கிய காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications