தங்கம் விலை பறக்க போகுது! ரெப்போ விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி.. எச்சரிக்கும் ஆனந்த் சீனிவாசன்
சென்னை: இன்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஆர்பிஐ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைப்பதாக கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். இதை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், ஆனந்த் சீனிவாசன் இதை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் தங்கம் விலை உயரும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஆர்பிஐ கூட்டம் நடைபெற்றது. சஞ்சய் மல்ஹோத்ரா ஆர்பிஐ கவர்னராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

சஞ்சய் மல்ஹோத்ரா:
இதன் காரணமாக சஞ்சய் மல்ஹோத்ரா வட்டி விகிதத்தைக் குறைப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். அனைவரும் எதிர்பார்த்தது போலவே குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா சமயத்தில் 2020ல் ரெப்போ விகிதம் அதிகரிக்க ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு 2023ம் ஆண்டு 6.5%ஆக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ரெப்போ வட்டி விகிதம் அதே நிலையில் இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் வீட்டுக் கடன் உள்ளிட்ட எல்லா கடன்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவேற்பு:
இதை ஒரு தரப்பினர் வரவேற்று வருகிறார்கள். இதன் மூலம் வட்டி விகிதம் குறையும். இஎம்ஐ தொகையும் குறையும் என்பதால் மக்களிடம் கணிசமாக பணம் இருக்கும். இதன் மூலம் மக்களுக்குச் செலவழிக்க அதிகப் பணம் இருக்கும் என்றும் இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
ஆனந்த் சீனிவாசன்:
இருப்பினும், இன்னும் பலரும் இது வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள். இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "இதனால் ரூபாய் மதிப்பு குறையும்.. பணவீக்கம் காரணமாகத் தங்கம் விலை அதிகரிக்கும்.. இந்த வட்டி விகித குறைப்பால் நிஃப்டி (பங்குச்சந்தை) கூட வீழ்ச்சி அடையும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு ட்வீட்டில், "நீங்கள் குறுகிய காலத்தில் சந்தைகளை (பங்குச்சந்தையை) கையாளலாம். ஆனால், சவுக்கடி வரும். அப்படி அது வரும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இரக்கமின்றி விற்பார்கள்.. அது பங்குச்சந்தையைக் கடுமையாகப் பாதிக்கும்" என்று ட்வீட் செய்துள்ளார்,
தங்கம் விலை:
தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.63,440க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,930க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அது தொடரும் என்றே ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பும் கூட ஆனந்த் சீனிவாசன் பல முறை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் அது தங்கம் விலை உயர காரணமாக அமைந்துவிடும் எனக் கூறியிருந்தார். அதாவது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை பெரியளவில் குறைக்காத போது, நமது ரிசர்வ் வங்கி மட்டும் வட்டி விகிதத்தை குறைத்தால் அது ஆபத்தாக முடியும் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications