அரசியல் நாகரிகத்திற்கு அழகல்ல.. ஸ்டாலின் தோல்வி குறித்து விஜய் சொன்ன குட்டிக்கதைக்கு எதிர்ப்பு!
சென்னை: திமுகவுக்கு பதிலடி கொடுப்பதற்காக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நக்கல் செய்து "உங்க அப்பாவை காணோம்" என்று முதல்வர் விஜய் சட்டசபையில் சொன்ன குட்டிக்கதை விமர்சனங்களை பெற்று வருகிறது. தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம் என்றும், தேர்தல் தோல்வியை வைத்து ஒருவரை நக்கல் செய்வது தமிழ்நாட்டின் மாண்புக்கு சரியாக இருக்காது என்று சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டசபையில் முதல்வர் விஜய் சொன்ன குட்டிக்கதை சோசியல் மீடியாவில் டிரெண்டாகி கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. விஜய் பேசுகையில், ஒரு ஊரில் ஒரு பெரியவர்.. வெயில் அதிகமாக இருக்கிறது என்று கண்ணுக்கு மேல் கை வைத்து கொண்டு சுத்தி தேடி கொண்டிருந்தாராம்.. அப்போது கூட நின்ற சின்னப் பையன் என்ன தேடிட்டு இருந்தீங்க என்று கேட்டானாம்..

அதற்கு அவர், ஒன்னுமில்லைடா தம்பி.. உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.. எங்க உங்க அப்பாவையே காணோம்.. என்றாராம்.. எங்களுக்கும் நக்கலாக, நய்யாண்டியாக பேச தெரியும்.. யாரும் டென்ஷனாக வேண்டாம்.. என்று பேசி இருந்தார். விஜய்யின் இந்த பேச்சு முதிர்ச்சி இன்றி இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
அதேபோல் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. தேர்தல் தோல்வியை வைத்து எந்த அரசியல்வாதியையும் மக்கள் எடை போடவோ, கிண்டல் செய்யவோ மாட்டார்கள். 1967 சட்டசபைத் தேர்தலில், காமராஜர் விருதுநகர் தொகுதியில் திமுகவின் மாணவர் அணி வேட்பாளரான பெ. சீனிவாசனிடம் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார்.
காமராஜர் தோற்றுவிட்டார் என்ற செய்தி அண்ணாவின் வீட்டிற்கு வந்தவுடன், அங்கிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆரவாரம் செய்தும் கொண்டாடத் தொடங்கினர். இதை அறிந்த பேரரறிஞர் அண்ணா, உங்கள் ஆர்ப்பாட்டத்தை உடனே நிறுத்துங்கள். தோற்கக் கூடாத நேரத்தில், தோற்கக் கூடாத இடத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர்.
இன்னொரு தமிழன் காமராஜர் இருந்த இடத்திற்கு வருவதற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்திற்குரியது அல்ல; அது ஒட்டுமொத்த தமிழினத்தின் இழப்பு என்று பேசினார். காமராஜரை வீழ்த்திவிட்டு அண்ணாவிடம் வாழ்த்து பெற வந்த சீனிவானிடம், உன்னுடைய வெற்றி தந்திருக்க வேண்டிய மகிழ்ச்சியை விட, காமராஜரின் தோல்வி தந்த வருத்தம்தான் என் மனதில் அதிகமாக இருக்கிறது என்று கூறியவர் பேரரறிஞர் அண்ணா.
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காமராஜர், பேரரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தான். இதனால் அரசியல்வாதிகள் மத்தியில் தோல்வி என்றும் பெரிதாக பேசப்படவோ, கிண்டலுக்கோ ஆளாகாது. ஏனென்றால் தமிழக அரசியல்வாதிகளால் தோல்வியையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தது.
ஆனால் முதல்வர் விஜய் சட்டசபையில் வைத்தே ஸ்டாலினின் தோல்வியை கிண்டல் செய்ததோடு, ஃபினிஷ்டு என்று சைகை செய்திருப்பது அவரது பதவிக்கு அழகல்ல என்று பார்க்கப்படுகிறது. கட்சியின் நிகழ்ச்சியின் பேசுவதை போல் அல்லாமல், இனியாவது சட்டசபை மாண்புக்கு ஏற்றபடி விஜய்யின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications