சபாஷ்! மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க இறங்கிய மத்திய அரசு.. ஆனால் தமிழகம் மிஸ்ஸிங்.. என்ன காரணம்?
டெல்லி: உலக அளவில் மிக முக்கியமான பயோ டைவர்சிட்டி மண்டலங்களில் ஒன்றாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு இப்போது முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் "சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக" (Eco-Sensitive Areas) அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்டக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், மேற்குத் தொடர்ச்சி மலை பரவியுள்ள ஆறு மாநிலங்களில் சுமார் 56,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைச் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்க முன்மொழியப்பட்டது. இந்த நடவடிக்கை மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்களையும், அங்குள்ள அபூர்வ உயிரினங்களையும் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மழை
இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுரங்கத் தொழில், அனல் மின் நிலையங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் இதர தொழிற்சாலைகளை அமைப்பது மற்றும் பிரம்மாண்டமான கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட உள்ளது. இப்பகுதிகளில் நடைபெறும் அழிவுகரமான வணிக நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அங்கு வாழும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான நிலையான வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமே ஊக்குவிக்கப்படும்.
திட்டம் என்ன
தொடக்கத்தில் குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களையும் இந்தத் திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்துடன் முழுமையாக உடன்படவில்லை. கேரளா தனது மாநிலத்தில் முன்மொழியப்பட்ட சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையைக் குறைக்கக் கோருகிறது.. ஏனெனில் அங்குக் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையோரப் பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கர்நாடகாவும் இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
3 மாநிலங்கள் மட்டும்
சுரங்கத் தொழில், கல் குவாரிகள் மற்றும் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு விதிக்கப்பட உள்ள தடை தொடர்பாகவே இரு மாநிலங்களின் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்தத் தடையால் தங்களின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று அம்மாநிலங்கள் கருதுகின்றன. இதன் காரணமாக, தற்போதைக்கு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் தாமதமின்றி இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் இத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பில் ஒரு பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
325 அரிய உயிரினங்கள்
உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ, மேற்குத் தொடர்ச்சி மலையை உலகின் எட்டு மிக முக்கியமான பயோ டைவர்சிட்டி மையங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவிலான வெப்பமண்டல காடுகளைக் கொண்டுள்ள இந்த மலைப்பகுதி, உலகளவில் அழிந்துவரும் ஆபத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் மீன்கள் என குறைந்தது 325 வகையான அரிய உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்கி வருகிறது.
கஸ்தூரிரங்கன் குழுவின் பரிந்துரையின் பேரில், கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த திட்டத்துக்கான முதல் வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. அதற்கு முன்னதாக காட்கில் குழு அளித்த பரிந்துரையில் மேற்கு தொடர்ச்சி மலையின் 64 சதவீதப் பகுதியைச் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கக் கோரியிருந்தது. ஆனால், கஸ்தூரிரங்கன் குழு அதனை 37 சதவீதமாகக் குறைத்துப் பரிந்துரைத்தது.. அதன் அடிப்படையிலேயே தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications