எனது நண்பனின் பெயரை நிலைநாட்டக் கூடிய வகையில் அன்பில் மகேஸ் செயலாற்றுகிறார் -ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: தனது ஆருயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழியின் பெயரை நிலைநாட்டக்கூடிய வகையில் அன்பில் மகேஸ் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமைச்சர் உதயநிதி தனக்கு வழங்கப்பட்டுள்ள துறைகளை மேம்படுத்துவார் என நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு;

அருமை நண்பர்
எனது அருமை நண்பர், உயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழியை நினைவூட்டக்கூடிய வகையில், அவரது பெயரை நிலைநாட்டக்கூடிய வகையில் அன்பில் மகேஸ் செயல்பட்டு வருகிறார். பள்ளிக்கல்வித் துறையை, இந்தியாவிலேயே மிகச் சிறந்த துறையாக ஆக்க நித்தமும் உழைத்துக் கொண்டு இருக்கிறார் தம்பி அன்பில் மகேஸ் அவர்கள்.

தம்பி உதயநிதி
அதேபோல், இந்த மேடைக்குப் புதியவராக, அமைச்சரவைக்கு புதியவராக வருகை தந்துள்ள தம்பி உதயநிதி அவர்கள். அமைச்சரவைக்குத்தான் புதியவரே தவிர, உங்களுக்கு நன்கு அறிமுகமானவர், உங்களுக்கு பழைய முகம்தான். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது விமர்சனம் வந்தது. விமர்சனம் வரத்தான் செய்யும். இப்படி விமர்சனங்கள் வந்தபோது, 'என்னுடைய செயல்பாட்டைப் பாருங்கள், அதன்பிறகு விமர்சியுங்கள்' என்றார்.

விமர்சனங்கள் வந்தது
அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபோதும் விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாடுகளால் பதில் சொல்லி, அனைவரது பாராட்டையும் பெற்றார், தன்னை நிரூபித்துக் காட்டினார். உதயநிதிக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கிறது. இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்புத் திட்டச் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புறக் கடன்கள் ஆகிய முக்கியமான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் ஏழை எளிய, விளிம்புநிலை மக்களை மேம்படுத்தக்கூடிய துறைகள்! இவைதான் அவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்
அமைச்சர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றி இந்தத் துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக இருக்கிறது. மேம்படுத்த வேண்டும் என்பதை முதலமைச்சராக நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன்.












Click it and Unblock the Notifications