ரூ.2,500 ஊதிய உயர்வு, மே மாதமும் சம்பளம்.. பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு!
சென்னை: தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 19ஆவது நாளாக எழும்பூர் இர்வின் சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அங்கு தயாராக இருந்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

பின்னர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து போராடியவர்கள் தரப்பில், எங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்கு இன்னும் எத்தனை நாட்களானாலும் தொடர்ந்து போராடுவோம். அரசு ஊழியர்களை அலைக்கழிப்பது ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. எஸ்எஸ்ஏ திட்டத்தில் ரூ.3,548 கோடி மத்திய அரசிடம் இருந்து வர வேண்டி இருக்கிறது. அதனை மத்திய அரசு விடுவிக்காமல் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இருந்தாலும், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகளுக்கு உறுதுணையாக அரசு இந்த செலவினங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்களின் போராட்டம் எனக்கு கனத்த இதயத்தை தருகிறது. இதனை முதல்வர் ஸ்டாலினிடமும் கூறினேன். பொங்கல் பண்டிகை நாளில் மகிழ்ச்சி என்பது வார்த்தையில் மட்டும் இல்லாமல் அவர்களுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி இருக்க வேண்டும்.
அதனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே மாதத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத சூழலில், இனி மே மாதத்திலும் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களும் சில கருத்துக்களை கூறியுள்ளனர். அதேபோல் பணியின் போது இறந்த 20 இடைநிலை ஆசிரியர்கள் இறப்புக்கும் ஏதாவது நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் நானும் கோரிக்கை வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
