சலசலக்கும் கிளாம்பாக்கம்.. பயணிகள் போராட்டத்திற்கு காரணம் இதுதான்.. அன்புமணி ராமதாஸ் சொன்ன விளக்கம்
சென்னை: தென் மாவட்ட மக்களின் வசதிக்காக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த பேருந்து முனையம் போதுமான வசதிகளுடன் இல்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நகரத்திற்குள் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கடந்த ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் இப்பேருந்து முனையத்தை கட்டி முடிக்க கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தது.

இப்படியாக பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் இப்பேருந்து முனையம் மீது எழுந்திருக்கின்றன. இப்பேருந்து முனையத்திற்கு செல்ல நகர பேருந்துகளை தவிர வேறு வழி கிடையாது. ஆனால், கோயம்பேட்டில் இந்த பிரச்னை இல்லை. நகரின் மூலையில் இருக்கும் திருவொற்றியூரிலிருந்து கூட கோயம்பேட்டிற்கு மெட்ரோ சேவை இருக்கிறது. இது இல்லாமல் நகர பேருந்தில் வருவதெனில் குறைந்தபட்சம் 45 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிடலாம்.
ஆனால் கிளாம்பாக்கத்திற்கு இப்படி எந்த வசதியும் கிடையாது. வடபழனியில் வேலை செய்யும் ஒருவர் மாநகராட்சி பேருந்தில் புறப்பட்டால் கிளாம்பாக்கம் வர குறைந்தபட்சம் 1 மணி நேரத்திலிருந்து 1.30 மணி நேரம் வரை ஆகும். மட்டுமல்லாது மெட்ரோ, மின்சார ரயில் என எந்த வசதியும் கிளாம்பாக்கத்திற்கு கிடையாது. இப்படியான விமர்சனங்களுக்கு மத்தியில் தற்போது போதுமான பேருந்துகள் இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.
கடந்த 9ம் தேதி இரவு தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் அதிக அளவில் கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். ஆனால் தங்களுக்கு போதுமான பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், "
நாங்கள் திருச்சியை சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்ல இங்கு வந்திருக்கிறோம். ஆனால் இங்கு பஸ் கிடைக்கவில்லை. எங்கள் கிராமங்களுக்கு பஸ்ஸை கேட்கவில்லை, முக்கியமான நகரமான திருச்சிக்குதான் பஸ் கேட்கிறோம். குறைந்தபட்சம் 5000 பேராவது இங்கு இருப்போம். இதுவரை திருச்சிக்கு என 25 பேருந்துகள்தான் சென்றிருக்கிறது. நான் நேற்றிரவு 10 மணிக்கு இங்கு வந்தேன். தற்போது விடியற்காலை 3.15 மணி ஆகிவிட்டது. இதுவரை திருச்சிக்கு பஸ் கிடைக்கவில்லை. இங்கிருந்து எங்கள் ஊருக்கு மொத்தமே 5 மணி நேரம்தான். ஆனால் பேருந்துக்காக 6 மணி நேரமாக காத்திருக்கிறோம்" என்று கூறியிருந்தனர்.
இதனையடுத்து 9ம் தேதி மற்றும் 10ம் தேதியன்று பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், பேருந்துகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். அதேபோல ஜிஎஸ்டி சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேருந்து முனையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர், போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்தப்படுவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸின் தம்பி பேத்தி சாகித்தியா ராஜராஜன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், "கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதியுற்று வருகின்றனர். பணிகளை முழுமையாக முடிக்காமல் அவசர கதியில் பேருந்து முனையம் திறக்கப்பட்டிருக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications