சவுமியா அன்புமணிக்கு Fans club.. அமெரிக்கா வரை ரசிகர்கள்! அன்புமணி ராமதாஸ் சொன்ன தகவல்
சென்னை: சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்ட பிறகே பாமக எம்எல்ஏக்கள் பேசுவது மக்களிடையே சென்று சேர்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பார்க்க வரும் அனைவருமே சவுமியா அன்புமணிக்கு ரசிகர் மன்றத்தை ஆரம்பிக்க போவதாக சொல்வதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்த பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்த நிலையில், அவை முழுமையாக நேரலை செய்யப்பட்டது. அதற்கு மக்களிடையே மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பாமகவின் சவுமியா அன்புமணி பேச்சுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அன்புமணி ராமதாஸ்
இதற்கிடையே சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்ட பிறகே பாமக எம்எல்ஏக்கள் பேசுவது மக்களிடையே சென்று சேர்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்துகளை கூறினார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "இப்போதுதான் நம்மளை பற்றி கொஞ்சமாவது நல்லா பேசுறாங்க. இல்லன்னா... 'அய்யய்யோ இவங்களா? ஜாதி கட்சிப்பான்னு ஒரே வார்த்தையில் முடிச்சுடுவான். இப்போ நம்ம சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணியும் மற்ற நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் நன்றாக பேசுகிறார்கள்... அவர்களுடைய பேச்சுக்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இப்போதுதான் மக்களிடம் செல்கிறது.
கருத்துகள்
இதுக்கு முன்னாடி 30 வருஷமா நமது கருத்துகள் மக்களிடம் போகவே இல்லை. இப்போ 3 மாதமாக தான் போகுது. அதிலும் ஒரு சந்தோஷம், மகிழ்ச்சி. இப்போதாவது போகுதே! அதுக்கே சிலருக்கு பொறாமை வந்துவிட்டது... அதுக்குள்ள பொறாமை... அய்யய்யோ என்ன இவங்க இப்படி ஸ்கோர் பண்றாங்க? எப்படி பேசுறாங்கன்னு பொறாமை. நேத்து கூட நான் ஈரோடு போயிருந்தேன், ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்.
என்னுடைய பள்ளி வகுப்பு நண்பருடைய மகன் திருமணம் அது. அந்த கல்யாணத்தில் நிறைய பேர் வந்தாங்க. என்னுடைய வகுப்பு தோழர்கள் நிறைய பேர் வந்தார்கள். அவங்கெல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறப்போ, அங்க இருக்கிற அவர்களின் மனைவிகள் எல்லாம் சேர்ந்து... நாங்க வந்து சௌமியா ஃபேன் கிளப்னு தொடங்கலாம்னு இருக்கோம்னு சொல்கிறார்கள்.
சவுமியா அன்புமணி பேன்ஸ் கிளப்
அவங்கள் எல்லாம் எந்தெந்த சமுதாயம், யார் என்றே தெரியாது. ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதும் நாங்க மேடம் ஃபேன்னு சொல்றாங்க. பெங்களூரு போனாலும் அங்க மேடம் ஃபேன்னு சொல்றாங்க. அமெரிக்காவில் இருந்து போன் பண்ணி, நாங்க அங்க ஒரு ஃபேன் கிளப் தொடங்கலாம்னு இருக்கோம்னு என்கிறார்கள்.
ஏனென்றால் அவர்கள் அவ்வளவு ஆக்கப்பூர்வமான, எளிமையான கருத்துகளை எளிமையாக விளக்குகிறார்கள். அதேபோல மக்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு, மதுவிலக்கு, தொழிற்சாலை விஷயங்களை ஆக்ரோஷமாக பேசுகிறார்கள் என பாராட்டுகிறார்கள். இதை எல்லாம் மக்கள் சட்டசபையில் நேரலையில் பார்க்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
