+2 மாணவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் தேவை.. “எதிர்காலமே பாதிக்கும்”.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிகமானோர் பொதுத் தேர்வு எழுதாதது பற்றி அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : +2 தமிழ் பாடத் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சி அளிப்பதாகவும், கவுன்சிலிங் மூலம் அச்சத்தைப் போக்கி தேர்வு எழுதச் செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிளஸ் 2 முதல் நாள் தேர்விற்கே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழ்நாடு அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அதிர்ச்சி
தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ்த் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கு 50,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வராதது அதிர்ச்சி அளித்துள்ளது. பள்ளி மாணவர்களில் 49559 மாணவர்கள் முதல் நாள் தேர்வை எழுத வரவில்லை. அதே போல், பதிவு செய்த தனித்தேர்வர்களில் 1115 தேர்வர்கள் தேர்வுக்கு வரவில்லை. முதல் நாள் தேர்விற்கே 50,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுவே முதல் முறை
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறை. இது அதிர்ச்சியளிக்கிறது.

அச்சம் காரணமாக
கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாதது, தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால் ஏற்பட்ட அச்சம் ஆகியவை தான் பெரும்பான்மையான 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்கு காரணம் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும் இந்த மாணவர்கள் எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

கவுன்சிலிங் அவசியம்
அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழ்நாடு அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! தமிழ் மொழிப்பாடத்தாள் தேர்வை எழுதாத மாணவர்களின் பட்டியலை வட்ட அளவில் தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications