பல்ப் கொடுத்த பாமக.. அன்புமணி ஐடியாவைக் கேட்காத எடப்பாடி! பாஜகவை வச்சு என்னதான் செய்யப் போறாரோ?
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என அதிரடியாக அறிவித்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். 2026 சட்டசபை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்த நிலையில் இந்த தேர்தலில் ஆதரவளிக்காததற்கு காரணம் குறித்த புதிய தகவல் ஒன்று தற்போதைக்கு வெளியாகி உள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய். இதற்கிடையே தமிழக சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் திடீர் பரபரப்பு உருவானது. அதிமுகவில் இருந்த 20-கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை விடுத்தது. பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அந்த நடவடிக்கையை கைவிடப்பட்டது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இடைத்தேர்தல் 2026
இது ஒரு புறம் இருக்க அதிமுகவின் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும் பெரம்பூர் எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜயும் ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியானது.
மதுராந்தகம் இடைத்தேர்தல்
மற்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் 5 தொகுதிகள் தவிர்த்து மதுராந்தகத்துக்கும், தாராபுரத்துக்கும் இடைத்தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவிய மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். திமுக, அதிமுக, நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி உள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி
கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக நிற்கின்றன. அதிமுகவில் பாஜக தவிர்த்து பெரிய கட்சிகள் ஆதரவு இல்லை. திமுகவுக்கு தேமுதிக உள்ளிட்ட சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாம் தமிழர், கம்யூனிஸ்டுகளும் தனித்தனியே களத்தில் நிற்கின்றன. இதனிடையே பாட்டாளி மக்கள் கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது.
அன்புமணி ராமதாஸ்
திடீர் திருப்பமாக எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என அதிரடியாக அறிவித்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ். அதிமுகவுக்கு ஆதரவளித்த நிலையில் இந்த தேர்தலில் ஆதரவு தராததுக்கு என்ன காரணம் என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். மதுராந்தகத்தில் பாமக செல்வாக்காக இருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியில்லை என அறிவித்ததோடு எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை எனவும் முடிவு செய்து இருக்கிறார் அன்புமணி.
பூவை ஜெகன் மூர்த்தி
செப்டம்பர் 18ஆம் தேதி அதனை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார். இந்த நிலையில் தனது ஆலோசனையை எடப்பாடி பழனிச்சாமி கேட்காததால் தான் அன்புமணி இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது மதுராந்தகம் தனி தொகுதியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என அன்புமணி ஆலோசனை சொல்லி இருக்கிறார்.
பொது வேட்பாளர்
மேலும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டோரது ஆதரவை கோரினால் பொது வேட்பாளர் போல ஜெகன் மூர்த்தி களத்தில் நிற்கலாம். இதனால் கூட்டணி கட்சிகள் வாக்குகள் மட்டுமல்லாது பிற ஆதரவாளர்களது வாக்குகளும் கிடைக்கும் என எடப்பாடியிடம் சொல்லி இருக்கிறார். கடந்த 2021 தேர்தலில் கேவி குப்பம் தனித் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெகன்மூர்த்தி. 2026 தேர்தலில் வெற்றி பெறாத நிலையில் தற்போது அவரை போட்டியிட வைக்கலாம் என அன்புமணி சொன்னாராம்.
எடப்பாடி பழனிசாமி
ஆனால் அன்புமணியின் ஆலோசனையை ஏற்காமல் கணிதா சம்பத்தை களத்தில் இறக்கி இருக்கிறார் எடப்பாடி. இதன் காரணமாகத்தான் தனது ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார் அன்புமணி என்கின்றனர். மேலும் தாராபுரத்திலும் பொது வேட்பாளர் என்ற ஆலோசனையை எடப்பாடி ஏற்காததால் தான் அந்த தொகுதியிலும் ஆதரவில்லை என அன்புமணி தெரிவித்து இருக்கிறார்.
வன்னியர் வாக்கு வங்கி
அதுமட்டுமல்லாமல் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது விஜய் அலையில் பல்வேறு தொகுதிகளில் அதிமுக மண்ணைக் கவ்விய நிலையில் பாமக செல்வாக்காக இருக்கும் வன்னியர் வாக்கு வங்கி கொண்ட தொகுதிகளில் தான் அதிமுக அதிகமாக வென்றது. ஆனால் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுகவினர் ஒழுங்காக வேலை செய்யவில்லை. எடப்பாடி ஆதரவை முழுமையாக தரவில்லை என்பதால் தான் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் தோற்றனார். ஆனால் அதிமுகவினர் போட்டியிட்ட தொகுதிகளில் பாமகவினர் தீவிரமாக பணியாற்றியதால் தான் அதிமுகவினர் வெற்றி பெற்றனர். இதனால்தான் எடப்பாடிக்கு எதிரான நிலைப்பாட்டை அன்புமணி எடுத்து இருக்கிறார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
