"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சக முன்னாள் அமைச்சரான மனோ தங்கராஜை நோக்கி வீசியுள்ள கடுமையான விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக தென் மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
"அமைச்சர் மனோ தங்கராஜ் மனக் குழப்பத்தில் இருக்கிறார்" என்று அனிதா ராதாகிருஷ்ணன் பகிரங்கமாகச் சாடியுள்ளதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோ தங்கராஜின் செயல்பாடுகள், பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. செய்தியாளர்களைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணனிடம், மனோ தங்கராஜின் சமீபத்திய விமர்சனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சற்றும் யோசிக்காமல் மிகக் கடுமையான வார்த்தைகளால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரை திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ ஆகியோர் சமீபத்தில் சந்தித்து, 'கனிம வளங்களை எடுத்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என்று கடிதம் கொடுத்தனர். இதனை விமர்சித்து முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், வீடியோ வெளியிட்டார்.
மனோ தங்கராஜ் கடுமையான விமர்சனம் வைத்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அனிதா ராதாகிருஷ்ணன், நான், நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது 400 லாரிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. அங்குள்ள டிரைவரிடம், எதற்கு இவ்வளவு லாரிகள் நிற்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், முறைப்படி எல்லா ஆவணங்கள் இருந்தும் லாரிகளை மடக்கி வைத்துள்ளார்கள் என்று தெரிவித்தனர்.
எனவே அவர்களுக்கு குரல் கொடுப்பதற்காக உள்ளூர் எம்.எல்.ஏ. ஆஸ்டினை அழைத்துச்சென்று மாவட்ட கலெக்டரை சந்தித்து, இந்த தொழிலை சரியாக செய்கிறவர்களுக்கு எந்த அரசாங்கமும் தடை விதிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தேன்.
அப்போது இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, கேரளாவும் இந்தியாவில்தானே இருக்கிறது. அது என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது? என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. கனிம வளங்களை கொண்டு செல்லவில்லை என்றால் நாகர்கோவிலில் இருப்பவர்கள் எப்படி கட்டிடங்கள் கட்டுவார்கள். இதற்குதான் குரல் கொடுத்தோம். சகோதரர் மனோதங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக உட்கட்சிப் பூசல்களை சீனியர்கள் பொதுவெளியில் மழுப்பலாகப் பேசி கடந்துவிடுவார்கள். ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் சற்றும் தயங்காமல் மனோ தங்கராஜை விமர்சித்துள்ள விதம், திமுகவிற்குள் தென் மாவட்ட அரசியல் எந்த அளவுக்குப் புகைந்துகொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications