திமுகவின் சென்னை மேற்கு மா.செ. பதவி- அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகனுக்கு அதிக சாய்ஸ்?
சென்னை: திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., கொரோனா வைரஸ் பாதிப்பால் காலமானார். இதனையடுத்து ஜெ. அன்பழகன் வகித்த பதவி யாருக்கு என்கிற விவாதம் திமுகவில் நடக்கிறது.
எம்.எல்.ஏ. கு.க. செல்வம், கலைராஜன், தனசேகரன், அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகன், பரமசிவம், திருவல்லிக்கேணி மதன், மயிலை வேலு என பலரது பெயரும் அடிபட்டு வருகிறது. இன்னொரு பக்கம் அன்பழகன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அதிமுகவினருக்கேவா?
கலைராஜனும் கு.க. செல்வமும் அதிமுகவில் இருந்து திமுகவில் வந்தவர்கள். அவர்களுக்கு தலைநகர் சென்னையின் ஒரு மாவட்ட செயலாளர் பொறுப்பை கொடுப்பதற்கு எதிர்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஏற்கனவே சென்னை கிழக்குக்கு அதிமுகவில் இருந்து வந்த சேகர் பாபு மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

கலைராஜனுக்காக லாபி
இந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கே வாய்ப்பா? என்கிற குமுறல் கேட்கிறது. ஆனாலு அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய சேகர்பாபு போன்றவர்கள் தங்களது பிடியை தக்க வைக்க லாபியில் தீவிரமாக இருக்கின்றனர். இதில் கலைராஜனுக்கான லாபி படுதீவிரமாக இருக்கிறதாம்.

எம்.எல்.ஏ. மோகன்
இருப்பினும் அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனுக்கு மாவட்ட செயலாளராகும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என கூறப்படுகின்றன. பெரும் செல்வந்தரான மோகன். M.K.மோகன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக நிதி உதவி வழங்கி வருகிறார். ஏழை எளியவர்களை அரவணைத்துச் செல்வதற்காகவே இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

மோகனுக்கு மா.செ. பதவி?
அவரது மகன் கார்த்தி, திமுகவின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளராகவும் இருக்கிறார். அண்மையில் கூட அண்ணாநகர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஜெ. அன்பழகன் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு சபரீசனை அழைத்து வந்தார் மோகன். அந்த அளவுக்கு திமுக தலைமையில் மிகுந்த செல்வாக்கு கொண்டவர் அண்ணாநகர் மோகன். இதனால் மோகனுக்கே சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications