அண்ணா பல்கலை. மாணவியை சீண்டிய ஞானசேகரன்! யார் அந்த சார்! அடுத்த திருப்பம்.. ஆக்சனுக்கு தயாரான போலீஸ்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு காவல் துறையினர் தயாராகியுள்ளனர். ஞானசேகரன் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் சென்னை காவல்துறையினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர் போலீசார்.

மேலும் இது தொடர்பாக சென்னையில் பிரியாணி கடை நடத்தி வருபவரும், திமுகவை சேர்ந்தவருமான ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலை. சம்பவம்:
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவியின் பெயர், விலாசம், தொலைபேசி எண் உள்ளிட்டவை அந்த எஃப்ஐஆர்-ல் இடம் பெற்று இருந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார் சென்னை காவல் ஆணையரான அருண்.
காவல் ஆணையர் அருண்:
”எஃப்ஐஆர்-ல் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே எழுத வேண்டும் என்பதுதான் விதி. அண்ணா பல்கலைக்கழகத்தில் 77 சிசிடிவி கேமராக்கள் இருக்கும் நிலையில் 56 சிசிடிவி கேமராக்கள் வேலை செய்தது. அதில் வைத்து தான் குற்றவாளியை பிடித்திருக்கிறோம். ஞானசேகரன் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாரா? என்பது போன்ற எந்த தகவலும் கிடையாது என கூறினார்.
போலீசார் நடவடிக்கை:
இதற்கிடையே சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்கள் வெளியானது, முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. அது மட்டுமல்லாமல் மாணவியை மிரட்டிய போது ஞானசேகரன் தொலைபேசியில் ’சார்’ என ஒருவரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் ’யார் அந்த சார்’ என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யார் அந்த சார் என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஞானசேகரன் மீது வழக்கு:
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஞானசேகரன் மீது மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் மனு:
இந்த நிலையில் வழக்கு தொடர்பான தகவல்களை பெறுவதற்காகவும், சம்பவத்தின் போது நடந்தது குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுக்க சென்னை பெருநகர காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பத்து நாள் அனுமதி கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஞானசேகரனை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications