"சார்" என ஞானசேகரன் பேசினார்.. மீண்டும் மாணவி உறுதிப்படுத்தியதாக வெளியான செய்தி.. போலீஸ் மறுப்பு
சென்னை: தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன், மொபைல் போனில் சார் ஒருவரிடம் பேசினார் என சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, சிறப்பு புலனாய்வு குழுவிடம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஞானசேகரனின் மொபைல் ஃப்ளைட் மோடில் இருந்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்த நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தகவலை காவல்துறை மறுத்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி போலீசாரிடம் அளித்த புகாரில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகரன், போனில் பேசும்போது சார் என்று ஒரு நபரை குறிப்பிட்டு பேசினார் எனத் தெரிவித்திருந்தார் என்று கூறப்பட்டது.

மேலும், ஞானசேகரன் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், மற்றொரு "சாரிடமும்" தனியாக இருக்க வேண்டும், நீ அவருடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதாக மாணவி புகாரில் குறிப்பிட்டார் என்று சில ஊடகங்களில் தகவல் கசிந்தது. மேலும், அந்த நபர் போனில் பேசிய போது, "இந்தப் பெண்ணை மிரட்டிவிட்டு விட்டுவிடுவேன் சார்" என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார் என்று கூறப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர் கசிந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், "யார் அந்த சார்?" எனக் கேள்வி எழுந்தது. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதுகுறித்து விளக்கம் அளிக்கும்போது, "குற்றவாளி பேசும்போது, "சார்" என பேசியதாக குறிப்பிடுகின்றனர். மாணவி சொன்னது எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த நபர் தனது போனை ஏரோபிளேன் மோடில் வைத்திருந்தார். அவர் போனில் பேசியதாக கூறப்பட்டது தவறான தகவல். சும்மா அந்தப் பெண்ணை பயமுறுத்துவதற்காக சார் எனக் கூறியுள்ளான்." எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில் ஞானசேகரன் தவிர வேறு யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. “யார் அந்த சார்” என எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற உத்தரவின் படி, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் புக்யா சினேகபிரியா, அய்மன் ஜமால், பிரிந்தா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் போனில் யாரோ ஒருவரிடம் 'சார்' என பேசியதையும், மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என போனில் பேசியவரிடம் ஞானசேகரன் கூறியதாகவும் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார் அந்த மாணவி என்று முன்னணி செய்தி தொலைக்காட்சிகள் சில செய்தி ஒளிபரப்பின.
தொடர்ந்து, ஞானசேகரனின் செல்போனை ஆய்வு செய்தில் பல்வேறு பெண்களின் ஆபாசப் படங்களும், திருப்பூரைச் சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர் ஞானசேகரனுடன் இருக்கும் வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருப்பூரை சேர்ந்த அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த அந்த நபர் யார்? அவரிடம் விசாரணை நடத்தினால் வேறு யாரும் சிக்குவார்களா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருந்த நிலையில், மாணவி இவ்வாறு கூறியதாக செய்தி வெளியிடுவது விசாரணைக்கு குந்தகம் ஏற்படுத்தும் என்று காவல்துறை இன்று இரவு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழு இவ்வாறு வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், செய்தி ஒளிபரப்புவது சரியல்ல என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications