Katta Kusthi 2 ott: ஓடிடியில் வெளியாகும் 'கட்டா குஸ்தி 2'.. எப்போ, எதில் பார்க்கலாம்? வெளியான தகவல்
சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா குஸ்தி 2' படம் இன்னும் தியேட்டர்ல ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே, (Katta Kusthi 2 ott) ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படம் பார்த்தவர்கள் மட்டுமல்ல, "தியேட்டரில் மிஸ் பண்ணிட்டோமே" என்று வருத்தப்பட்ட ரசிகர்களும் இப்போது ஓடிடி வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
2022-ல் வெளியான 'கட்டா குஸ்தி' படம் ஃபேமிலி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கணவன்-மனைவி உறவில் இருக்கும் ஈகோ, புரிதல், காமெடியே அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் செல்ல அய்யாவு, விஷ்ணு விஷாலுடன் மீண்டும் இணைந்து 'கட்டா குஸ்தி 2' படத்தை உருவாக்கினார்.

கட்டா குஸ்தி 2 நடிகர்கள்
இந்த முறை விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
படம் வெளியான முதல் நாளிலிருந்தே குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக காமெடி காட்சிகள், விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி இடையேயான கெமிஸ்ட்ரி, எமோஷனல் போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில், கிளைமாக்ஸில் பெண்கள் கேரக்டர் கையாளப்பட்ட விதம் குறித்து சில விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன. இருந்தாலும் வசூல் ரீதியாக படம் நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.

விமர்சனங்கள்
இதற்கிடையில், சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தனது படத்தை சுற்றி சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் குறித்து அமைதியாக பதிலளித்திருந்தார். படத்தை பற்றிய விவாதங்கள் வருவது ஆரோக்கியமான விஷயம் என்றும், ரசிகர்களின் கருத்துகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். அந்த பேட்டியும் இணையத்தில் கவனம் பெற்றது.

கட்டா குஸ்தி 2 ஓடிடி அப்டேட்
இப்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஓடிடி வெளியீடு பற்றிய அப்டேட்டுதான். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் ஓடிடி நிறுவனம் அல்லது படக்குழு இதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டரில் பார்க்க முடியாமல் தவறவிட்ட ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது. அதே நேரத்தில், படம் ஓடிடியில் வெளியான பிறகு இன்னும் அதிகமான பாராட்டு கிடைக்குமா?, முதல் பாகம் போல நீண்ட நாட்கள் பேசப்படுமா? என்பதையும் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.














Click it and Unblock the Notifications