கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட பெண் அமைச்சருடன் எடுத்த புகைப்படம்.. பாய்ந்து வந்த அண்ணாமலை, தினகரன்
சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட பெண், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிர சோதனை நடத்திய போலீசார், கஞ்சா விற்பனை செய்ததாக சரண்யா என்பவரை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் கைப்பற்றினர்.

விசாரணையில் பல மாதங்களாக சரண்யா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அத்துடன் சரண்யா சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட சரண்யா அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் "கஞ்சா நடமாட்டமே இல்லை" என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களுடனும், இந்தப் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார்.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடனான புகைப்படத்துக்கு பல காரணங்களைச் சொல்லி மழுப்பிய, அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், பல முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
இந்த அழகில், அந்தப் பெண் கஞ்சா வியாபாரி, 196 வது 'அ' வட்ட கண்ணகிநகர் திமுக துணை செயலாளர் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் வரை நெருக்கமாக இருக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள், திமுகவை தங்கள் கூடாரமாக வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை கண்ணகி நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகி கைது - கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை முறையாகக் கண்காணிக்கத் தவறியதே அப்பெண் மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடக் காரணமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை எனக்கூறிய மருத்துவத்துறை அமைச்சருடனே, கஞ்சா விற்றதாகக் கைது செய்யப்பட்ட பெண் எடுத்த புகைப்படத்தோடு, அவர் திமுகவின் நிர்வாகி எனப் பரவும் தகவல் தமிழகத்தில் திமுக தான் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, கஞ்சா விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications