அறிவாலயத்தில் ஒரு புல்லை கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது.. திமுக ஆர்.எஸ்.பாரதி சவால்!
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் அண்ணாமலையால் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் திமுகவை கடுமையாக தாக்கிப் பேசி, "அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுத்துவிட்டுத் தான் போவேன்" எனப் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்பது நிச்சயமாக ஒரு கற்பனை. அது நடக்கவே நடக்காது என்பது ஊரறிந்த உண்மை." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதாக கூறியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஆர்.எஸ்.பாரதி, "ஒரே மேடையில் எங்களுடன் விவாதிக்க அண்ணாமலை தயாரா? நாங்கள் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "ஆளுநரும் இருக்கவேண்டும், அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்று முதல்வர் சொல்கிறார். ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வாராம். உங்கள் கட்சியில் தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.
பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" எனப் பேசியிருந்தார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications