இந்தியாவை காப்பாத்துறது இருக்கட்டும்.. முதலில் திமுகவிடம் இருந்து தமிழகத்தை காப்பாத்துங்க: அண்ணாமலை
சென்னை: இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் வாக்குப்பதிவு அன்று கடலூரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீமுஷ்னம் அருகே பக்கிரிமானியம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் திமுக பிரமுகர்களான ரவி, கலைமணி ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஜெயக்குமாரின் மனைவி கோமதி, தனது குடும்பத்தினருடன் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவருடன் சென்ற பெண் ஒருவரின் வயது குறித்து கேள்சி எழுப்பியதால் ஜெயக்குமார் தரப்புக்கும்
கலைமணி தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் தலையிட்டு விலக்கி விட்ட நிலையில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 6 மணிக்கு மேல் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஜெயக்குமாரின் மனைவி மற்றும் சிலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கோமதி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் ரவி, கலைமணி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை.
அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது.
இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும். உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications