பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு.. தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை கூட மதிக்கவில்லை.. அதிர வைத்த அண்ணாமலை
சென்னை: பத்திரப்பதிவுத் துறையில் 2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்த வேண்டும் என்றும், கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக இத்தனை நாட்களாக வசூலித்த கூடுதல் கட்டணத்தை, பொதுமக்களுக்கு தமிழக அரசு திருப்பித் தர வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரப்பதிவு வழிகாட்டு மதிப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவவது: "தமிழகத்தில், யாரிடமும் கலந்தாலோசிக்காமல், பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறியாமல், சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கடந்த ஆண்டு மார்ச் 30-ந்தேதி அன்று திராவிட முன்னேற்ற கழக அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் இந்த உயர்வு அமலுக்கு வந்தது. சுமார் 50 சதவீத அளவுக்கு வழிகாட்டி மதிப்பை உயர்த்தியதால் பொதுமக்களும், கட்டுமான நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சில கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், சட்டவிதிகளின் படி, துணைக் குழுக்களை அமைத்து, அவற்றின் அறிக்கைகளை ஆய்வுசெய்து, பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்ட பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்ன உயர்நீதிமன்றம் கூறியது.
மேலும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தமிழக அரசு பிறப்பித்த வழிகாட்டி மதிப்பு உயர்வு அறிக்கை சட்டவிரோதமானது என்றும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதிய வழிகாட்டி மதிப்பை அறிவிக்கும் வரை, 2017-ம் ஆண்டு அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஆனால், தமிழக அரசு, நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், தொடர்ந்து கூடுதல் கட்டணத்தையே வசூலித்து வருகிறது. இது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். தொடர்ந்து பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த பின்னரும், தமிழக அரசு அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
சட்டவிரோதமாக, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதன் நோக்கம் பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத் துறையில் பல முறைகேடுகள் நடந்து வருவதும், அமைச்சர் மூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதும் பொதுமக்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.
பொதுமக்களுக்காக செயல்பட வேண்டிய அரசு, தற்போது யாருக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுவது இயற்கையே. தங்கள் கடின உழைப்பில் நிலமோ, வீடோ வாங்க விரும்பும் பொதுமக்கள், தி.மு.க.வினர் பணம் சம்பாதிக்க, சட்டவிரோதமாக கூடுதல் பணம் கப்பம் கட்ட வேண்டுமா?, கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் உண்மையில் அரசு கஜானாவுக்குத்தான் செல்கிறதா என்பதில் பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக திமுக அரசு, பத்திரப்பதிவுத் துறையில் 2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே பயன்படுத்த வேண்டும் என்றும், கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக இத்தனை நாட்களாக வசூலித்த கூடுதல் கட்டணத்தை, பொதுமக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்றும் தமிழக பா.ஜனதா சார்பில் வலியுறுத்துகிறேன்" இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications