பாஜகவை முடிக்க.. திமுக, விசிக-லாம் தேவையே இல்லை.. அண்ணாமலை மட்டும் போதும்.. காயத்ரி ரகுராம் அட்டாக்!
பாஜகவின் கதையை முடிக்க அண்ணாமலை மட்டும் போதும் என்று காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவின் கதையை முடிக்க திமுக, விசிக உள்ளிட்ட எந்த கட்சியும் தேவையில்லை என்று கூறியுள்ள நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலை ஒரே ஆள் மட்டும் போதும் என்று பதிவிட்டுள்ளார். பாஜகவில் இருந்து ஒவ்வொரு நாளும் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வரும் சூழலில், தமிழ்நாட்டில் பாஜகவின் ஆணி வேரை அண்ணாமலை அறுத்து வருவதாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவராக எல்.முருகன் இருந்த போது, பலரையும் கட்சியில் இணைத்து வந்தார். அதுமட்டுமல்லாமல் வேல் யாத்திரை, அதிமுகவுடனான கூட்டணி ஆகியவற்றில் சுமூக உறவையே பேணி வந்தார்.
ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து ஏராளமானோர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக மதுரை சரவணன், திருச்சி சூர்யா சிவா, நடிகை காயத்ரி ரகுராம், ஐடி விங் தலைவர் சிடி நிர்மல் குமார் ஆகியோர் விலகினர்.

அடுத்தடுத்து விலகும் பாஜக நிர்வாகிகள்
இதில் திருச்சி சூர்யாவை தவிர்த்து மீதமுள்ள அனைவருமே, அண்ணாமலையின் தலைமையையும் வார் ரூம் அரசியலையும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக ஐடி விங் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். சிடி நிர்மல் குமார் நேற்று விலகிய நிலையில், அடுத்த நாளே மற்றொரு முக்கிய நிர்வாகியான திலீப் கண்ணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வார் ரூம் அரசியல்
இதனால் தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் பாஜகவில் இருந்து விலகிய திலீப் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம்.

ஆருத்ரா கும்பல்
ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார். தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார்.

நயினாரை மதித்ததில்லை
நயினார் அண்ணன் அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாக கூட மதித்தது இல்லை. மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை தனது அறையில் உள்ளே வைத்துக்கொண்டு **** என்று போலீஸ் தோரணையில் ஏளனமாக பேசுவது. இவர் வந்து தான் எல்லாம் கிழிச்ச மாதிரி எல்லாம் கம்பு சுத்துறானுங்க இவர் இடத்தில் ஒரு பொம்மை வந்திருந்தாலும் பாஜக தொண்டன் தூக்கி கொண்டாடிருப்பான் என்று பதிவிட்டுள்ளார்.

வேறு யாரும் தேவையில்லை
இந்த நிலையில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வரும் நடிகை காயத்ரி ரகுராம், இந்த விவகாரம் குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் கடைநிலை பகுதிகள் வரை வேர்விட்டு பாஜக வளர வேண்டும் என்று அண்ணாமலை பேசி இருந்தார். ஆனால் அதற்கு மாறாக பாஜகவின் ஆணி வேரையே அண்ணாமலை வெட்டி வருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் கதையை முடிக்க திமுக, விசிக, மதிமுக, சிபிஐ, காங்கிரஸ், ஏன் நாம் தமிழர் கட்சி கூட தேவையில்லை. அண்ணாமலையே போதும் என்று கிண்டல் செய்துள்ளார். இவரது ட்விட்டர் பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications