"இந்த 18 கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்க.." நீட் விலக்கு தொடர்பாக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: நீட் விலக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக முதல்வருக்குத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 18 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மற்ற விஷயங்களில் முரண்பட்டு இருக்கும் அரசியல் கட்சிகள் கூட நீட் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தச் சூழலில் நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவைத் தயார் செய்திருந்தது.

அனைத்துக் கட்சி கூட்டம்
கடந்த செப். 13ஆம் தேதி தமிழக சட்டசபையில் இந்த மசோதா முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, இந்த நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

18 கேள்விகள்
இந்தச் சூழலில் நீட் தேர்வு குறித்து நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், நீட் விலக்கு தொடர்பாக 18 கேள்விகளை எழுப்பியுள்ள அண்ணாமலை, மக்களை ஏமாற்றும் பிரச்சனைகளுக்கு துணை நிற்க மாட்டோம் என்றும் அனைத்துக் கட்சி கண்துடைப்பு கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது என்றும் அறிவித்துள்ளார்.

அண்ணாமலை அறிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி. தமிழக அரசுக்கு மக்கள் நலனுக்காக முழு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக மக்களுக்கும், நம் தமிழ் மாநிலத்தின் அனைத்து தேவைகளுக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும் பா.ஜ.க தயாராக உள்ளது. தாங்கள் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தேவை மற்றும் அவசியம் குறித்து, எங்களது கீழ்கண்ட சந்தேகங்களுக்கு பதில் அளிக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவர்கள் உயிரோடு விளையாட நினைக்காதீர்கள்
மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக இதற்கு முன்னர் 2017 ஏப்ரல் மாதம், இதேபோன்ற ஒரு சட்ட முன் வடி தயாரிக்கப்பட்டு 2017 மே மாதம் ஒப்புதல் பெறப்பட்டு 2017 செப்டம்பர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. பின்னர், 2017 செப்டம்பர் 18-ம் நாள் அந்த சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் மாநில அரசுக்கு 22-ம் தேதி செப்டம்பர் மாதம் 2017 குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது என்ற விபரம் தாங்கள் அறிந்ததே.
ஏற்கெனவே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட ஒரு சட்ட முன் வடிவை மீண்டும் அனுப்புவதால் தாங்கள் என்ன சாதிக்க நினைகிறீர்கள். அல்லது மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து ஏதாவது செய்து, அரைத்த மாவை அரைத்து தங்கள் இருப்பை காட்டிக் கொள்ள நினைக்கிறீர்களா? தயவு செய்து மாணவர்களின் வாழ்க்கையோடும், அவர்கள் உயிரோடும் விளையாடி அரசியல் செய்ய நினைக்காதீர்கள். அதை பா.ஜ.க அனுமதிக்காது.

நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை நீங்களே எதிர்ப்பது சரியா
மேலும் 2013-ம் ஆண்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் இந்திய அரசு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் நீட் தேர்வு எந்த சட்டவிதிமுறைகளுக்கும் முரணானதல்ல. மக்கள் அடிப்படை உரிமைக்கும் எதிரானதல்ல என்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கும் பிறகுமா, உங்களுக்கு சட்ட ரீதியான சந்தேகங்கள் வருகிறது.
நாடாளுமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அப்போதைய சுகாதாரத் துறை இணையமைச்சராக இருந்தவர் காந்தி செல்வன் தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். 2010-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி regulation of graduate medical examination என்ற தலைப்பிலே, இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டம் 1946 விதி 10(2)ன் கீழ் மத்திய அரசுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்த அதிகாரம் இருப்பதாக கூறி, முதன்முதலில் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வான நீட்டைக் கொண்டு வந்து முன்மொழிந்தவர். தி.மு.கவின் அமைச்சர் காந்தி செல்வன் நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை நீங்களே எதிர்ப்பது சரியா?" உள்ளிட்ட 18 கேள்விகளை அண்ணாமலை எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications