பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?
சென்னை: தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு பெரும் புயலுக்குத் தயாராகி வருகிறது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராகவும், இளம் தலைவராகவும் அடையாளம் காணப்படும் கே. அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த சில வாரங்களாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதை கிட்டத்தட்ட உறுதியப்படுத்த தயாராகி வருகின்றன.. பாஜகவின் முக்கிய தூணாகக் கருதப்பட்ட அண்ணாமலையின் இந்த திடீர் திட்டம் , தமிழக அரசியல் சமன்பாடுகளை முழுமையாக மாற்றியமைக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை திடீரென அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகி மௌனம் காத்தது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தீவிர அரசியல்வாதியாக இருந்த ஒருவர் தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்ததற்கான காரணம் இப்போது தெளிவாகியுள்ளது.
அண்ணாமலை மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு எதிராக கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை அவருக்கும் பாஜக மேலிடத்துக்கும் இடையேயான ஆழமான விரிசலை வெளிச்சமிட்டது. கட்சியின் அடிப்படை கொள்கைகளிலேயே முரண்பாடு ஏற்பட்டதால், மேலிடம் போதிய ஆதரவு கொடுக்காததால் அண்ணாமலை தனக்கென தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
தனிக்கட்சி தொடங்கும் திட்டத்துடன் அண்ணாமலை அதிரடியான முதல் கட்ட நடவடிக்கையையும் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் நேரடியாகப் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி கிழக்கில் போட்டி
இது மட்டுமல்லாமல், தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காலியாக உள்ள இடைத்தேர்தல் தொகுதிகளிலும் தனது புதிய கட்சியின் சார்பில் வலுவான வேட்பாளர்களை நிறுத்த அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
பூத் அளவில் ரகசிய வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் அண்ணாமலையின் திட்டம் மிகவும் தீவிரமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
தற்போது அண்ணாமலை ஆன்மீகப் பயணமாக நேபாளம் சென்றுள்ளார். பயணத்தை முடித்துக் கொண்டு விரைவில் சென்னை திரும்பவுள்ள அவர், சென்னை வந்ததும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முக்கிய சந்திப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் ஆர்வம் அனைவரும் அறிந்ததே. அண்ணாமலையின் நேர்மை, துடிப்பு மற்றும் தமிழக மக்களுக்கான அர்ப்பணிப்பு ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்தமானது என்பதால், அவரது புதிய கட்சிக்கு ரஜினி முழு ஆதரவு அளிக்க வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் மட்டுமின்றி, தமிழகத்தின் பல முக்கிய தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் (IAS, IPS), மற்றும் சில அரசியல் தலைவர்களும் அண்ணாமலைக்கு திரைமறைவில் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த ஆதரவு அவரது புதிய அரசியல் பயணத்துக்கு பெரும் பலத்தை அளிக்கும்.
அண்ணாமலையின் இந்த முடிவு பாஜகவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்திய முக்கிய முகங்களில் ஒருவரான அண்ணாமலை இனி மாற்று சக்தியாக உருவெடுக்கப் போகிறார் என்று ஆருடங்கள் கூறுகின்றன. . சென்னை திரும்பியதும் அவர் வெளியிடவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த அரசியல் மாற்றம் தமிழகத்தில் புதிய கூட்டணி சமன்பாடுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலையின் தனிக்கட்சி தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அடுத்த சில வாரங்கள் தீர்மானிக்கும்.












Click it and Unblock the Notifications