திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடி! கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும்! அண்ணாமலை வேண்டுகோள்!
சென்னை: திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற தேசியக் கொடி ஏந்தியபடி நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
ஏற்கனவே தேசியக் கொடியும், கருணாநிதியும் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளக் கணக்குகளில் தனது புரோஃபல் பிக்சராக முதல்வர் மாற்றியிருப்பது கவனிக்கத்தக்கது.

சுதந்திர தினம்
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா வரும் 15-ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக "சுதந்திர தின அமுதப் பெருவிழா" என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிரதமர் மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் பாஜகவினர் தேசியக் கொடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற தேசியக் கொடி ஏந்தியபடி நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அதில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோருடன் தேசியக் கொடியை ஏந்தியபடி பேரணியாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஸ்டாலினுக்கு கோரிக்கை
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பிரதமர் அறிவித்துள்ள 'சுதந்திர தின அமுதப் பெருவிழாவை' ஒரு அரசாக தமிழகத்தில் திமுக அரசு நடத்த வேண்டும் என்றும் திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி பறக்க விட வேண்டும் என ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை தாம் ஸ்டாலினுக்கு மட்டும் வைக்கவில்லை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வைப்பதாக அண்ணாமலை கூறினார்.
Recommended Video

அதிமுகவினர் வீடுகள்
பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அதிமுக, பிரதமர் கோரிக்கையை ஏற்று கட்சியினர் வீடுகளில் தேசியக் கொடியை 3 நாட்களுக்கு பறக்க விடுமாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஏற்கனவே தேசியக் கொடியும், கருணாநிதியும் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளக் கணக்குகளில் தனது புரோஃபல் பிக்சராக முதல்வர் மாற்றியிருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications