விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி
சென்னை: டெல்லி சென்றுள்ள அண்ணாமலை மாநிலத் தலைமையைச் சந்தித்து பாஜகவில் இருந்து விலகுவதாகக் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். அண்ணாமலை புதிய மக்கள் இயக்கத்தை உருவாக்க உள்ளதாகவும் 6 மாதங்கள் கழித்து அதைக் கட்சியாக மாற்றும் திட்டம் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அண்ணாமலையின் புதிய கட்சி மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தல்களில் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகத் தகவல் பரவியது. அதை உறுதி செய்யும் விதமாக டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, அக்கட்சியின் தேசியத் தலைவர் நபீனை சந்தித்து தனது விலகல் கடிதத்தைக் கொடுத்துள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அண்ணாமலை விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை
மேலும், பாஜகவில் இருந்து விலகுவதற்கான 5 பக்கக் கடிதத்தை பாஜக தேசிய தலைமையிடம் அண்ணாமலை அளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்த முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் தமிழக பாஜகவின் முகமாகப் பார்க்கப்பட்ட அண்ணாமலையின் இந்த விலகல் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகச் சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. தமிழ்நாடு தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து சந்தித்த பாஜகவால் வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைக்கத் தொடக்கம் முதலே அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என்றே சொல்லப்பட்டது. ஆனாலும், கட்சித் தலைமை உத்தரவின்படி அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். ஆனால், அது வழக்கமான அவரது ஸ்டைல் பிரச்சாரமாக இல்லை.
இடைத்தேர்தல்
இந்தச் சூழலில் தான் அண்ணாமலை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், பாஜகவில் இருந்து விலகியுள்ளார். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, அண்ணாமலை விரைவில் தனது சொந்த அரசியல் அமைப்பைத் தொடங்கத் தயாராகி வருகிறார். இந்த புதிய அமைப்பு வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் நேரடியாகக் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அண்ணாமலையின் தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிப்பதற்கான ஒரு மிக முக்கியமான சோதனைக் களமாக அமையும்.
5 தொகுதிகள்
அதாவது இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இது தவிர அதிமுகவின் அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 4 தொகுதிகளின் எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதனால் மொத்தம் 5 தொகுதிகள் காலியாகியுள்ளன. இதற்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் போட்டியிடத் தான் அண்ணாமலை முடிவு செய்திருக்கிறார்.
மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் அண்ணாமலை தமிழக அரசியலில் பாஜகவின் பிம்பத்தை மாற்றினார். அதுவரை பாஜகவுக்குத் தமிழகத்தில் பெரிதளவில் செல்வாக்கு இல்லாமல் இருந்தது. ஆனால், அண்ணாமலை தனது ஆக்ரோஷமான பிரச்சாரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பாஜகவை இளைஞர்களிடையே எடுத்துச் சென்றார். கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை அவர் மேற்கொண்ட நடைப்பயணங்கள் மற்றும் பிரச்சாரங்கள் அவருக்கு ஒரு தனிப்பட்ட ஆதரவுத் தளத்தை உருவாக்கியுள்ளன.
அண்ணாமலை அதிருப்தி ஏன்
சட்டசபை தேர்தலின் போது பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருந்தார். கட்சியின் வளர்ச்சிக்கு இதுவே சரியான பாதை என்று அவர் நம்பி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் பாஜக மேலிடம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது அண்ணாமலைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைக்கப்பட்ட சில நிபந்தனைகள் அண்ணாமலைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.. அண்ணாமலை அப்போது பாஜக மாநிலத் தலைவராக இருந்த நிலையில், தலைமையை மாற்ற வேண்டும் என எடப்பாடி கட்டாயப்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. புதிய மாநிலத் தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிறகே அதிமுக பாஜக கூட்டணி 2025ல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய கட்சி அறிவிப்பு
அதன் பிறகும் கூட அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் களத்தில் போட்டியிடாத அண்ணாமலை, தற்போது தனது எதிர்காலத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அண்ணாமலை இது தொடர்பான விரிவான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அண்ணாமலையின் இந்தப் பயணம் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications