நான் தமிழகத்திற்கு எதுக்கு வந்தேன்.. தோசை சுடுவதற்கோ இட்லி சுடுவதற்கோ அல்ல.. நான் லீடர்.. அண்ணாமலை
நான் தமிழகத்திற்கு தோசை சுடவோ இட்லி சுடவோ வரவில்லை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
சென்னை: நான் தமிழகத்திற்கு தோசை சுடவோ இட்லி சுடவோ வரவில்லை. நான் தலைவன், தப்பு செய்தால் தட்டி கேட்பேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக தலைவராக கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை பொறுப்பேற்றவுடன் கட்சியில் எந்தவித வளர்ச்சியையும் அவர் செய்யவில்லை என கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
முன்னாள் தலைவர்கள் இருந்த போது எத்தனையோ பேர் மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் வந்து இணைந்துள்ளார்கள். ஆனால் தற்போது பாஜகவிலிருந்து பலர் விலகி மாற்றுக் கட்சியில் இணையும் நிலை உள்ளது.

பாஜகவிலிருந்து வெளியேறியவர்கள்
மதுரை சரவணன், காயத்ரி ரகுராம், சிடிஆர் நிர்மல் குமார், திலீப் கண்ணன் உள்ளிட்டோர் அதிமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தனர். அதிலும் காயத்ரியை விட நிர்மல் குமாரும், திலீப்பும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். 420 அண்ணாமலை என்றும் , தமிழகத்திற்கே சாபம் என்றும் திமுகவுடன் பேரம் பேசும் அண்ணாமலை என்றும் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.

ஐடி விங்
அது போல் பாஜக ஐடி விங்கின் மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணன், கே டி ராகவன் உள்பட பல மூத்த தலைவர்கள் மீது பொய் புகார் கொடுத்து அவர்களை அண்ணாமலை ஓரங்கட்டினார். எந்த பெண்ணுமே புகார் கொடுக்காத நிலையில் டெல்லியில் நல்ல செல்வாக்கில் இருந்த கே டி ராகவனை காலி செய்தார், இவருடைய வார் ரூம் எத்தனை பேரை காவு வாங்க போகிறதோ என திலீப் கண்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.

சிடிஆர் நிர்மல் குமார்
இந்த நிலையில் சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்துவிட்டார். இதுகுறித்து பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் கூட்டணியில் உள்ள அதிமுக இதை செய்திருக்கக் கூடாது. தமிழகத்தின் எதிர்காலம் பாஜகதான், அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக ஆட்சி அமைக்கும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை சுட்டிக் காட்டிய அமர்பிரசாத் ரெட்டி, கோட்டையை கைப்பற்றுவதை மறந்துவிட வேண்டியதுதான் என அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார் அமர்பிரசாத் ரெட்டி. இவர் பேசிய பேச்சு அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.

நிர்வாகிகள் தேர்தல்
மேலும் அதிமுக மூத்த நிர்வாகிகள் தேர்தல் என வரும் போது தேசிய கட்சியாகவே இருந்தாலும் அதிமுக தலைமையின் கீழ் தான் கூட்டணி அமைக்கப்படும் என பதிலடி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கூட்டணியில் விரிசல் குறித்து சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இட்லி சுட வரவில்லை
அதற்கு அவர் கூறுகையில் தமிழகத்திற்கு அண்ணாமலை தோசை சுடுவதற்கோ இட்லி சுடுவதற்கோ வரவில்லை. தமிழகத்தில் ஒரு தோசையை சுட்டுகிட்டு, இட்லியை சுட்டுக்கிட்டு, பாஜகவின் மேனேஜராக உட்கார்ந்து சீட்டை தேய்ச்சிகிட்டு அப்படியே சைட்ல போய்கிட்டு இருக்க வரலை, அண்ணாமலை இங்கு தலைவராக வந்திருக்கேன். தலைவராக இருப்பவன் தலைவராகத்தான் முடிவுகளை எடுப்பான்.

ஜெயலலிதாவின் முடிவுகள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முடிவுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் எனது முடிவுகளும் அதிரடியாக இருக்கும். இதில் பயம், ஒருவருக்கு சார்ந்து பேசுதல், பின்னாடி போய் கைகட்டி பேசுவது இதெல்லாம் கிடையாது. நான் ஒரு தலைவன் , தலைவன் தலைவனுக்கு தகுந்த மாதிரிதான் முடிவுகளை எடுப்பான். இதில் பாரபட்சம் கிடையாது. அதிமுகவிலிருந்து நிறைய முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்த போது ஜெயலலிதா மீதும் இதே குற்றச்சாட்டை வைத்திருக்கலாமே. ஏன் இது போன்ற அதிரடி முடிவுகளை கருணாநிதி எடுத்ததில்லையா, அவர்கள் எல்லாம் தலைவர்கள். அவர்கள் முடிவெடுத்தால் 4 பேர் கோபப்பட்டுக் கொண்டு வெளியே வரத்தான் செய்வார்கள். நானும் அது போன்ற ஒரு தலைவர்தான்.

கட்சி வளர்ச்சி
கட்சி வளர்ச்சிக்கு என்ன முடிவு எடுக்கணுமோ அந்த முடிவுகளை துணிந்து எடுப்பேன். நான் போற ஸ்பீடே குறைவாக இருக்கு என்கிறார்கள். 2026 இல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் இன்னும் 3ஆவத கியரில் போகிறீர்களே, டாப் கியருக்கு மாறுங்கள் என்கிறார்கள். இன்னும் வரும் காலத்தில் வேகத்தை அதிகரிப்பேன். இதனால் 4 பேர் கட்சியை விட்டு வெளியே போய் அண்ணாமலையை விமர்சிப்பார்களா என பயந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட மாட்டேன்.

தொண்டர்களுக்கு முன்னுதாரணம்
நான் தலைவனாகத்தான் முடிவுகளை எடுப்பேன். ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எல்லாரும் திட்டிவிட்டு எங்கே போகிறார்கள். விவசாயம் செய்யவா, சமூகசேவை செய்யவா, இல்லையே இங்க திட்டிட்டு வேறு அரசியல் கட்சியில் இணைந்து கொண்டு இன்னொரு அரசியல் கட்சிக்கு வாழ்க என சொல்ல போகிறீர்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications