அதிமுக பாஜக கூட்டணிக்குள் பிரச்சினையில்லை.. முட்டல் மோதல் சகஜம் என்கிறார் அண்ணாமலை
சென்னை: பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை என்றும் அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன் என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜமானது தான் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக இடையே கடந்த ஓராண்டு காலமாகவே பிரச்சினை நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. அண்ணாமலை தலைவரானதில் இருந்தே தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார். பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையில் கருத்து. அதற்காகவே தான் தலைவராக வந்திருப்பதாகவும் கூறி வருகிறார். அவ்வப்போது அண்ணாமலை பேசும் பேச்சுக்கள் அதிமுக பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தி விடும்.

அப்படித்தான் ஜெயலலிதா பற்றியும் அண்ணாவைப் பற்றியும் அண்ணாமலை கூறியது பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியது. அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது என்று கூறினார் ஜெயக்குமார். கடந்த 2 நாட்களாகவே அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையை வசைபாடினர். எடப்பாடி பழனிச்சாமியோ எந்த கருத்தும் கூறாமல் அமைதி காத்து வந்தார். ஆனால் பாஜகவை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தகவல் வெளியானது.
அண்ணாமலையை பற்றி பயங்கரமாக விமர்சனம் செய்த செல்லூர் ராஜூவோ, எங்களுக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் என்றும் மோடிதான் பிரதமர் என்றும் கூறினார் செல்லூர் ராஜூ.
இதனையடுத்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 50 ஆண்டுகளாக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டவில்லை என்று கூறினார்.
அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, மோடியை பிரதமராக ஏற்கிறது அதிமுக. பிறகு பிரச்சனை . தன்மானத்தை விட்டுக் கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக நான் இங்கு வரவில்லை. தன்மானத்திற்கு பிறகு தான் எனக்கு அரசியல். என் தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் போது நான் பதில் பேசுவேன்.
எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. யாரையும் நான் தவறாக பேசவில்லை. கூட்டணி தொடர்பாக அதிமுக பேசிய கருத்துக்கு நான் பதிலளிக்க முடியாது என்று கூறினார். அதிமுக - பாஜக இடையே சித்தாந்தங்கள் வேறு வேறு எனும் போது சில முட்டல் , மோதல் இருக்கத்தான் செய்யும். பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை.அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன்.
அதிமுகவில் சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால் இருக்கலாம். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜமானது தான். மது கடை வேண்டாம் என்றவர் அண்ணா; மதுக்கடைக்கு கையெழுத்து போட்டவர் கருணாநிதி.
மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துவதே இலக்கு. எந்த கட்சிக்கும் பாஜக போட்டி இல்லை. அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவேன். சனாதனத்தை ஆக்ரோஷமாக மக்களிடம் பாஜக எப்படி பேசுகிறதோ ?அதேபோல அதிமுக பேச வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரே மையப் புள்ளியில் இணைய வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி முறிந்து விட்டது என்று ஜெயக்குமார் சொன்ன நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அண்ணாமலை. லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பிரதான கட்சியான அதிமுகவுடன் இணைந்தே தேர்தலை சந்திக்க விரும்புகிறது பாஜக என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications