தனித்தீவில் வசிக்கும் அண்ணாமலை! கரூரில் நிர்மலா சீதாராமனை வரவேற்றதோடு சரி! மாநில பாஜகவில் விரிசல்?
சென்னை: கரூரில் 47 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். கரூர் மாவட்ட எல்லையில் அவரை வரவேற்று அண்ணாமலை அதற்குப் பிறகான நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை. நிர்மலா சீதாராமன் நிகழ்வுகளில், எல்.முருகன் மட்டுமே பங்கேற்ற நிலையில் தமிழக பாஜகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது. 2026 தேர்தலை முன்னிட்டு அந்தக் கூட்டணி மீண்டும் சேர்ந்த நிலையில் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் அண்ணாமலை.
அதற்குப் பிறகு அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறி வருகின்றனர் பாஜகவினர். ஆனால் அது தொடர்பான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியை வலுவாக்கும் வகையில் ஓபிஎஸ், டிடிவியை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வரும் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

கரூர் விபத்து
அதே நேரத்தில் பாஜகவில் இதுவரை இல்லாத அளவு தனிமனிதத் துதி இருப்பதாகவும் அதற்கு அண்ணாமலையே காரணம் என சில தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடனே பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கரூர் வந்திருந்தார். கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஆகியவற்றுக்கு நேரில் சென்று நிர்மலா சீதாராமன் சம்பவம் குறித்து பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடனும் கேட்டறிந்தார். அதற்குப் பிறகு இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலாவின் நிகழ்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் கரூர் வந்திருந்தனர். குறிப்பாக மத்திய அமைச்சரும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் ஆன எல். முருகன் நிர்மலா சீதாராமன் உடன் இருந்தார். ஆனால் நிர்மலா சீதாராமன் நேற்றைய நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நிர்மலா சீதாராமன் கரூர் வந்தபோது நெடுஞ்சாலை சந்திப்பில் தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்த அண்ணாமலை அவரைப் பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு தனது ஆதரவாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அண்ணாமலை
ஆனால் அதற்குப் பிறகு நிர்மலா சீதாராமன் எந்த நிகழ்விலும் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை சக கட்சித் தலைவர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வருகிறார். அந்த வகையில் தான் நிர்மலா சீதாராமனின் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தேசிய தலைவர் என்பதால் பெயருக்கு அவரை வரவேற்றுவிட்டு பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்கின்றனர் பாஜகவினர். இது ஒருபுறம் இருக்க கடந்த சில தினங்களாகவே அண்ணாமலையின் செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. எல்லா நிகழ்வுகளிலும் தானாகவே கலந்துகொள்கிறார்.
பாஜக விரிசல்
கரூர் நிகழ்விலும் அப்படித்தான் இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டு 28ஆம் தேதி கரூர் வந்த அவர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதற்குப் பிறகு அவரது செய்தியாளர் சந்திப்பு தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளானது. விஜய்யை மட்டும் குறை சொல்லக்கூடாது காவல்துறை மீதும் அரசு மீதும் குறைகள் இருக்கின்றன என அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சை பாஜகவினர் பலரும் வரவேற்றனர். அதற்குப் பிறகு பல பாஜக தலைவர்கள் கரூர் வந்தபோதும் அவர்களை அண்ணாமலை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அதிமுக விவகாரத்தில் அண்ணாமலை தனி ரூட் எடுத்து வரும் நிலையில் தற்போது கரூர் விவகாரத்திலும் தனி ஆவர்த்தனம் செய்கிறார் என்கின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications