விஜய்க்கு சப்போர்ட்டாக வந்த அண்ணாமலை.. அம்மாவை பற்றி எப்படி பேசலாம்? நயினாருக்கு எதிராக கொந்தளிப்பு
சென்னை: ''தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்து கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதனை ஏற்கவே முடியாது. இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல்'' என்று 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தின் அண்ணாமலை விளாசியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். இந்நிலையில் தான் சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ இதழான 'ஒரே நாடு' பத்திரிகையின் இரண்டாம் பதிப்பான 'ஒரே நாடு 2.0' அறிமுக விழா நடந்தது.

இந்த விழாவில் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் முதல்வர் விஜய் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. தவெகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''சட்டமன்றத்தில் போய் அப்பாவை எங்கே அப்பாவை எங்கே என்று தேடுகிறார்கள். வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று கேட்டால் தானே சொல்வாரகள். ஆனால் சட்டமன்றத்தில் போய் அப்பாவை எங்கே? அப்பாவை எங்கே? என்று கேட்கிறார்கள்.இப்படிப்பட்ட ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது'' என்றார்.
நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் நயினார் நாகேந்திரனின் பேச்சை கண்டித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தை தொடங்கி உள்ள அண்ணாமலை. இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் நயினார் நாகேந்திரனை கடுமையா கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்து கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல'' என கண்டித்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு எதிராக தமிழக டிஜிபியிடம் சென்னை மதுரவாலை சேர்ந்த வர்த்தினி என்ற வழக்கறிஞர் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விஜய் கட்சியில் அண்ணாமலை சேர முயற்சி செய்கிறாரா என்று பாஜக ஆதரவாளர்கள் பின்னூட்டத்தில் பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது. கிறிஸ்தவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அண்ணாமலை இதுவரை கண்டிக்காமல் தவெகவிற்கு ஆதரவாக கோதாவில் குதித்துள்ளது ஆச்சரியம் தருவதாக ஒரு பாஜக பதிவர் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
