திருப்பரங்குன்றம் மலைக்கு ஆபத்தில்லை.. அண்ணாமலை பதவிக்கே பிரச்சனை.. கி.வீரமணி கருத்து!
சென்னை: அண்ணாமலையின் பதவிக்கு ஆபத்து என்று கருதியே திருப்பரங்குன்றம் விவகாரத்தை கிளப்பி இருக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியவில்லை என்று, தென் மாவட்டங்களில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைவதாகவும் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. இதில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுத்து வழிபாடு நடத்தக் கூடாது என்று இந்து அமைப்புகள் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பின் வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி தர்காவில் ஆய்வு நடத்திய போது, அவர் மலை மீது அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

இதன் காரணமாக திருப்பரங்குன்றத்தை சுற்றி பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையை காப்போம் என்று இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்த நிலையில், மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் இந்து அமைப்புகள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்பட்டது.
இதன்பின் மதுரை பழங்காநத்தத்தில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் திடீரென அவ்வளவு பெரிய கூட்டம் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்று பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சியினரும் பிளவுவாத அரசியலை முறியடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியவில்லை என்று தென் மாவட்டங்களில் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.
நல் உறவுகளாக வாழும் மக்களிடையே மதவெறியை ஊட்டி பிளவுபடுத்த முனைகின்றனர். பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் ஒரு போதும் இதன் ஆல் வெற்றிபெற முடியாது. உத்தரப் பிரதேச தேர்தலுக்கு முன் முசாஃபர் நகரில் திட்டமிட்ட வகையில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் பெற்றதுண்டு என்பதால், சங் பரிவார்களுக்கே இது உரித்தான அணுகுமுறையே.
இப்படி திட்டமிட்டு வலிய வம்புகளை உருவாக்கி மதக்கலவர பூமியாக்க முயற்சிக்கும் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எந்த மலைகளுக்கும் தமிழ்நாட்டில் ஆபத்து இல்லை. அண்ணாமலைகளின் பதவிக்கு ஆபத்து என்று கருதியே அவர்கள் அதனை காப்பாற்ற இப்படியொரு புது வேஷம் கட்டி ஆடப் புறப்பட்டுள்ளார்கள். அனைவரும் ஒன்றுபட்டு அமைதி பூங்காவான தமிழ்நாட்டை காப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications