ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
சென்னை: திமுக, அதிமுகவுக்கு மாற்று மநீம தான் என தேர்தல் அரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியிருக்கிறார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த அக்கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில், நேற்று மாணவர் அணி தலைவர் சங்கர் ரவியும் ராஜினாமா செய்ததோடு, கட்சியில் உள் அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம்.

சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுக்களை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமல்ஹாசனை கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார்.
மக்கள் நீதி மய்யம்: இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. அதற்கு அடுத்த நாட்களிலும் தீவிர அரசியலில் ஈடுபடாத கமல் தக் லைஃப், இந்தியன் - 2, பிக் பாஸ் உள்ளிட்ட சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அறிக்கை, ட்விட்டர் அரசியலோடு நின்று விட்டது அக்கட்சி. தொண்டர்களை சந்திப்பது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியலுக்கு களத்திற்கு தேவையான எதையும் கமல்ஹாசன் மேற்கொள்ளாததால் பல கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.
கமல்ஹாசன்: 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், அதற்குப் பிறகு நடைபெற்ற ஊரக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்த நிலையில் அந்த கட்சியில் இருந்த பத்மப்பிரியா மகேந்திரன் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து விலகி திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இந்த நிலையில் திமுக அதிமுகவுக்கு மாற்று இடதுமில்லை வலதும் இல்லை மையமே மய்யத்தின் கொள்கை என முழங்கிய கமல்ஹாசன் காங்கிரஸோடு இணக்கம் காட்டியதோடு அதற்குப் பிறகு தற்போதைய மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளார்.
நிர்வாகிகள் விலகல்: அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு போட்டியிட சீட்டு ஒதுக்கப்படாத நிலையில் 2025-ல் நடிகர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை தேர்தல் சீட்டு வழங்க முடிவு செய்தது. இதற்காக திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் பத்து தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடாததால் மேலும் சில மக்கள் நீதி மையத்தின் மாநில நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த கட்சியின் மாநில செயலாளரும் மாநில தலைமை நிலைய பரப்புரையாளராக இருந்த அனுஷா ரவி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு பாஜகவிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
சங்கர் ரவி: திமுக, அதிமுகவுக்கு மாற்று மநீம தான் என தேர்தல் அரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியிருக்கிறார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த அக்கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில், நேற்று மாணவர் அணி தலைவர் சங்கர் ரவியும் ராஜினாமா செய்ததோடு, கட்சியில் உள் அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜினாமா: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கட்சியின் பதவி மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியில் எனக்கு எதிராக தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு கட்சியை விட்டு விலகுவது என்று சில வாரங்களுக்கு முன்பே முடிவு செய்தேன். சில சம்பவங்கள் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தன. கட்சியில் எனக்கு சிக்கல்கள் மற்றும் போலி உத்தரவாதங்கள் மற்றும் எனது வேலை மற்றும் செயல்பாடுகளை நிறுத்துவதற்கான அழுத்தம் கொடுக்கும் சில நிகழ்வுகள் நடந்தன.
உள் அரசியல்: எனக்கு இது ஒன்றும் புதிதல்ல என்றாலும், கட்சித் தலைமையின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது, வெளிப்படையாக எனக்கு என்ன நடந்தாலும் அது என்னிடம் சொன்னதற்கு நேர்மாறானது. நான் சில வாய்ப்புகளை விட்டுவிட்டு கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றினேன், ஆனால் இப்போது நான் உள் அரசியலால் சலிப்படைந்துவிட்டேன். ஆனால் ஒரு விதத்தில் நான் இப்போது உறுதியான முடிவை எடுப்பது நல்லது
பல பிரச்சினைகள்: நான் நீண்ட காலமாக கட்சிக்குள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறேன், யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. கடைசி நாள் வரை கட்சிக்காக உழைத்தேன். எப்படியிருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக கட்சிக்காக ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு நிகழ்வையாவது செய்து வருகிறேன், அது சமூக ஊடகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசி நாள் வரை கட்சிக்காக உழைத்தேன். எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்யம் இளைஞர்களையோ அல்லது கட்சிக்காக உழைத்தவர்களையோ புறக்கணிக்காது என நம்புகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications