4 வருடத்தில் மனிதகுலத்தையே அழிக்கும் ஏஐ? நான் வேலையை விட்டே போறேன்.. ஏஐ ஜாம்பவான் வார்னிங்
சென்னை: ஏஐ (AI) தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்களை அழிக்கக்கூடும் என்று கூறி, முன்னணி ஏஐ நிறுவனமான 'ஆன்ட்ரோபிக்' அமைப்பிலிருந்து ஒரு முக்கிய ஆய்வாளர் தன் வேலையை விட்டு வெளியேறியுள்ளார். ஜேக்கோப் காக்சன் என்ற அந்த நபர், உலக நாடுகள் மற்றும் நிறுவனங்கள் செய்யும் இந்த அவசரமான போட்டி மனிதர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஓபன்ஏஐ மற்றும் ஆன்ட்ரோபிக் போன்ற பெரிய ஏஐ நிறுவனங்களில் இவர் வேலை பார்த்துள்ளார். இந்த இரண்டு நிறுவனங்களும் எந்தவித பொறுப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று இவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தம்மைக் தாங்களே மிக வேகமாக வளர்த்துக் கொள்ளும் அதிபுத்திசாலி கம்ப்யூட்டர் அறிவைத் தேடி இந்த நிறுவனங்கள் ஓடுவதால், மனிதகுலம் பேராபத்தில் சிக்குகிறது என்று கூறியுள்ளார்.

அதாவது இவர்கள் உருவாக்கும் ஏஐ வரும் காலத்தில் மனிதர்களின் தேவையே இன்றி தானே வளரும் திறன் கொண்டது. மனிதர்கள் சொல்லாமல் அதுவே அதன் அறிவை வளர்த்துக்கொள்ளும். இதன் மூலம் மனித குலமே அழியும்.
இந்த ஏஐ தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை எவரும் சாதாரணமாக நினைக்கக் கூடாது. கூடிய விரைவில் இந்த ஏஐ அமைப்புகள் எந்தவொரு கம்ப்யூட்டரையும் ஹேக் செய்யலாம், எந்த வேலையையும் ஒரே இரவில் மாற்றலாம், கையில் பெரிய அதிகாரத்தையும் எடுக்கும். கடந்த சில ஆண்டுகளாக இதன் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது, அது இன்னும் குறையவில்லை.
இதனால் உலகமே அழியும் நிலை ஏற்படும். ஏஐ-யை உருவாக்கும் முக்கிய நிபுணர்களே, இன்னும் சில ஆண்டுகளுக்குள் இது மனிதகுலம் அனைத்தையும் அழித்துவிடும் என்று நம்புகிறார்கள். இது விளம்பரத்துக்காகச் சொல்லப்பட்ட விஷயம் அல்ல. வெளியில் பேசும்போது நிறுவனத்தின் பெரிய அதிகாரிகள் இதைச் சுலபமாகச் சொன்னாலும், தங்களுக்குள் பேசும்போது இவர்கள் பயந்து நடுங்குகிறார்கள். மனித வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இது பெரிய ஆபத்து.
"இவ்வளவு ஆபத்து என்று தெரிந்தும் ஏன் இதைத் தொடர்ந்து செய்கிறார்கள்?" என்று பலரும் கேட்கலாம். ஓபன்ஏஐ நிறுவனத்தில் இருப்பவர்கள் இதன் உண்மையான ஆபத்தை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், ஆன்ட்ரோபிக் நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து நன்றாகத் தெரியும். இருப்பினும், மற்றவர்கள் இதை செய்யும் முன், நாமே முந்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் இந்த போட்டியில் இறங்கியுள்ளனர்.
தனியார் அலுவலகங்களில் உட்கார்ந்துகொண்டு, உலகத்தையே அழிக்கப் போகும் இந்த விபரீத போட்டியில் இறங்குவது மிகத் தவறு. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இப்படி அவசரமாக ஓடுவது எவ்விதத்திலும் சரியல்ல.
இதைத் தடுக்க உலக நாடுகள் சேர்ந்து சில கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும். ஏஐ கணினிகள் மேலும் வளருவதைத் தற்காலிகமாகத் தடுத்தால் மட்டுமே இந்த உலகளாவிய போட்டியை நிறுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
கடைசியாக, ஏஐ நிறுவனங்களில் வேலை செய்யும் மற்ற ஆய்வாளர்களுக்கும் அவர் ஒரு கேள்வியை வைத்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் என்ன நடக்கப் போகிறது என்று யோசித்து பாருங்கள். இதன் உண்மையான விளைவு என்னவென்று தெரியாமல், கட்டுப்படுத்த முடியாத ஒரு ஏஐ அமைப்பை நீங்களும் உருவாக்கப் போகிறீர்களா? அல்லது இது இப்படித்தான் நடக்கும் என்று பார்த்துக்கொண்டு வேலை பார்க்கப் போகிறீர்களா? என்று கேட்டுவிட்டு அவர் தன் வேலையை விட்டு வெளியேறியுள்ளார். அவரின் இந்த எச்சரிக்கை ஏஐ உலகையே மிரள வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
