எல்லோரும் ரிக்ஷாவை எடுத்து ஓட்டிட்டா "ரிக்ஷாக்காரன்" ஆகிட முடியுமா.. ஆனாலும் ஆசைப்படுவது நியாயம்தானே
சென்னை: "அதென்ன, அரசியலுக்கு வருபவர்கள் எல்லாருக்குமே எம்ஜிஆர்தான் கிடைத்தாரா?" என்கிறது ஒரு தரப்பு.. "ஏன், அவர் ரசிகர்கள் நாங்கள் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தக்கூடாதா" என்று கேட்கிறது இன்னொரு தரப்பு!
வழக்கத்துக்கு மாறாக இந்த முறை விஜய் பட போஸ்டர்களில் எம்ஜிஆர் தென்படுகிறார்.. விஜய்யை எம்ஜிஆராக சித்தரித்ததையே மக்கள் ஜீரணித்து கொண்டார்களா என்று தெரியவில்லை, ஆனால் அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா கெட்டப்பில் சித்தரித்துள்ளனர்.
இன்னும் அரசியலுக்கு விஜய் வரவில்லை.. ரசிகர் மன்றம் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார்.. அதை மறுப்பதற்கில்லை.. ஆனால், "எம்ஜிஆரின் மறுஉருவமே" என்று சொல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? விஜயகாந்த் செய்யாததையா விஜய் செய்துவிட்டார்? என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது.

போஸ்டர்கள்
"2021-ல் தமிழகம் தலைமையேற்க வாங்க தலைவா!" என்றுகூட விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. இப்படித்தான் முக அழகிரியையும் போஸ்டர் அடித்து கொண்டு கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸையும் கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.. இருக்கிற ஒரு தமிழ்நாட்டுக்கு எத்தனை பேர்தான் தலைமை ஏற்க முடியும்? இதெல்லாம் ரசிகர்களின் உச்சக்கட்ட அன்பும், அபரிமிதமான பாசமும், ஆதரவாளர்களின் எல்லையற்ற நம்பிக்கையும் என்றே கூட நாம் வைத்து கொள்வோம்!!

விஜய்
ஆனால், எம்ஜிஆரை இவர்கள் இழுத்து கொண்டு வருகிறார்கள்? விஜய்யை விஜய்யாகவே காட்ட வேண்டியதுதானே? அதென்ன எம்ஜிஆரை டார்கெட் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டுவது என்பது அதிமுக தரப்பின் முணுமுணுப்பாக உள்ளது.. இதற்குதான் அமைச்சர் ஜெயக்குமார் "மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது, செஞ்சிக்கோட்டை ஏறியவர்களெல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது" என்று சுடச்சுட ஒரு பஞ்ச் சொல்லி உள்ளார்.

நாளை நமதே
இதுபோலவே கமல்ஹாசனும் "நாளை நமதே" என்ற ஒருவார்த்தையை மய்யத்தில் சொல்கிறார்.. நாளை நமதே படத்தில் சிறுவனாக கமலும் நடிக்க வேண்டி இருந்தது.. ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகவும் கமல் அளவுகடந்த வருத்தம் அடைந்துள்ளார்.. இந்த ஆதங்கம் இருக்கவே செய்யும்.. எம்ஜிஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், அது முடியாமல் போனால் ஆற்றாமைதான்... ஒப்புக் கொள்வோம்.. அதற்காக இவ்வளவு காலம் நாளை நமதே என்ற வார்த்தையை தன் சினிமா டைட்டில்களிலும், படங்களிலும், பயன்படுத்தாதவர், இப்போது திடீரென நாளை நமதே என்று பிரச்சாரத்துக்கு கிளம்ப போகிறார் என்றால், இதை அரசியலின் ஆதாயமாகத்தானே பார்க்க தோன்றுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அரசியல்
ஆனால் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கும், ஆட்சிக் கட்டிலில் அமரத் துடிக்கும் நடிகர்களுக்கும் கண்டிப்பாக எம்ஜிஆர் மட்டுமே ரோல் மாடலாக இருக்க முடியும். காரணம் அவர்தான் திரையுலகில் இருந்த கையோடு அரசியலில் புகுந்து அதே வேகத்தில் மக்கள் மனதையும் கவர்ந்து ஆட்சியைக் கைப்பிடித்த முதல் நடிகர். பின்னால் இதே பாணியில் ஆட்சியைப் பிடித்த என்டிஆருக்கே கூட எம்ஜிஆர்தான் ரோல் மாடல்.. அப்படி இருக்க நம்ம ஊர் நடிகர்கள் எம்ஜிஆரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

ரசிகர்கள்
"சினிமாவில் நடித்து, மக்கள் மனசில் இடம் பிடிச்சிட்டால் ஆட்சியிலும் உட்கார்ந்துடலாம் என்பதற்கு, உலகத்துக்கே ‘வெளிப்படுத்தியவர் எம்ஜிஆர்தான்.. அதனால் அவரோட ரசிகர்களான நாங்கள், அவரது ரூட்ல போறதுல என்ன தப்பு?" என்று கேட்கிறார்கள் பிற கட்சி தொண்டர்களும் பிற நடிகர்களின் ரசிகர்களும்! அதுவும் நியாயமானதுதான்.

கலைஞர்கள்
"வர்றேன்.. வந்துருவேன்.. வந்தே தீருவேன்" என்று பல காலமாக சொல்லிக் கொண்டே இருக்கும் ரஜினிகாந்த் முதல் வந்துட்டேன் மாற்றம் தராமல் போக மாட்டேன் என்று கூறி வரும் கமல் வரை அனைவருக்குமே எம்ஜிஆர் ஆகும் ஆசைதான் இருக்கிறது. இவர்கள் என்றில்லை எந்த சினிமாக் கலைஞராக இருந்தாலும் கூட எம்ஜிஆராக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். காரணம் எம்ஜிஆர் சென்ற உயரம், பெற்ற வெற்றி!

நம்பிக்கை
அவரை போலவே திரையுலகிலும் மக்கள் மனதிலும் வெல்ல வேண்டும் என்பதே அனைத்து சினிமாக்காரர்களின் கனவாகும்... விஜயகாந்த் அப்படித்தான் நினைத்தார் வந்தார் ஓரளவு வெல்லவும் செய்தார். தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று கூட சொல்ல வைத்தார்.. ஆனால், அவரது விளம்பரங்களிலும் அவரது கட்சித் தொண்டர்கள் மூலமாகவும்தான் கருப்பு எம்ஜிஆர் என்ற வார்த்தை விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர, பொதுமக்கள் யாருமே விஜயகாந்தை அப்படி அழைத்ததே இல்லை. காரணம் அவர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு எம்ஜிஆர்தான்.. கருப்பு, சிவப்பு, பச்சை எம்ஜிஆர்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

நிதர்சனம்
அவர் மட்டுமல்ல, அவருக்கு பிறகு வந்த எத்தனையோ பேர் எம்ஜிஆர் பெயரை அரசியல், சினிமாவில் பயன்படுத்தி கொள்ளதான் செய்தனர்.. ஆனால் எம்ஜிஆருக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்தது ஒரே ஒருவர்தான். அவர் ஜெயலலிதா மட்டுமே. எனவே அடுத்த எம்ஜிஆர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய முடியுமே தவிர வேறு எந்த சக்தியாலும் அதை தீர்மானிக்க முடியாது.. ஏன் சம்பந்தப்பட்ட நடிகர்களின் செல்வாக்கே கூட அதை தீர்மானிக்க முடியாது என்பதே நிதர்சனம்.. அப்படி இருந்திருந்தால் ரஜினிக்கு இருந்த செல்வாக்குக்கு இன்னேரம் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டு அவர் முதல்வராகியிருக்க மாட்டாரா என்ன.. ஆனால் மக்களிடம் எழுச்சி வர வேண்டும் என்று ரஜினியே சொல்லியும் கூட அது சுத்தமாக வராமல் இருக்கிறது என்பதுதான் இங்கு முக்கியமானது!

செல்வாக்கு
இந்த இடத்தில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.. இறுதிவரை அரசியலிலும் சரி, ஆட்சியிலும் சரி, தன் உறவினர்கள் யாரையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட அனுமதிக்காதவர் எம்ஜிஆர்.. அதனால்தான் எம்ஜிஆரின் செல்வாக்கு இன்று வரை அப்படியே உள்ளது. அவரை மிகப் பெரிய இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் மக்கள். ஆனால் அவரைப் பின்பற்றத் துடிப்போரில் 99 சதவீதம் பேர் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதை மக்கள் கண் கூடாக கண்டு வருவதால்தான் எம்ஜிஆர் இடத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் ஓரம் கட்டி வைத்துள்ளனர்.

நல்லவர்
எம்ஜிஆர் படங்களையே எடுத்து கொண்டாலும், அவரது கேரக்டர்களை பார்த்தாலும் சரி, எம்ஜிஆர் நல்லவர்.. தண்ணி அடிக்க மாட்டார்.. சிகரெட் பிடிக்க மாட்டார்.. தன் மனைவியையோ, காதலியையோ தவிர பிற பெண்களை தாயாக கருதுவார்.. ஏழைகளை பாதுகாப்பார்.. நாளைய எம்ஜிஆர் என்று சொல்லி போஸ்டர் ஒட்டுபவர்கள் தங்கள் ஆதர்ச தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்களா என்று ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கனவுகள்
அதுமட்டுமல்ல, எம்ஜிஆரை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைபவர்கள், அவரது கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ பின்பற்ற தயாராக இருக்கிறார்களா என்பதையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஒருவேளை அப்படி அறிவிக்கும் சூழல் வரும்வரை, யார் வேண்டுமானாலும் தன்னை எம்ஜிஆராக நினைத்து கனவு காணட்டும்.. ஏனென்றால், கனவு காணும் எல்லாருக்குமே உரிமை உண்டு.. கலாமே கனவு காணுங்கள் என்று சொல்லியிருக்கிறாரே.. கனவு காண்பதில் தவறே இல்லை..!












Click it and Unblock the Notifications