"கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார்”.. இல.கணேசன் மறைந்தது எப்படி? அப்பல்லோ மருத்துவமனை விளக்கம்
சென்னை: நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று மாலை காலமான நிலையில், அவரது மறைவு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன், இன்று மாலை 6.23 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80.

இல.கணேசன் காலமானார்
கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று மாலை 6.23 மணியளவில் இல.கணேசன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனை விளக்கம்
இல.கணேசன் மறைவு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆகஸ்ட் 15, 2025 அன்று மாலை 06:23 மணிக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதான இல.கணேசன் அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகஸ்ட் 08, 2025 அன்று மூளைக்குள் ஏற்பட்ட ரத்தக்கசிவு மற்றும் கோமாவால் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவர் இன்று காலமானார். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல.கணேசன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1945ஆம் ஆண்டு பிறந்த இல.கணேசன், சிறுவயதிலேயே தந்தையை இழந்து, அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது கொண்ட அதீத ஈடுபாடு காரணமாக, திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொதுவாழ்விற்கு வந்தார் இல.கணேசன். பாஜகவில் இணைந்து, கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
2009 மற்றும் 2014 ஆண்டு தென் சென்னை மக்களவை தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதனைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2021 ஆம் ஆண்டு மணிப்பூர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்ட கணேசன், மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார். கடந்த 2023ஆம் ஆண்டு நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications