இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்
சென்னை: 2016 ராதாபுரம் தொகுதி தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்றுள்ள முன்னாள் சபாநாயகர் அப்பாவு, காலதாமதமான தீர்ப்பாக இருந்தாலும் இறுதியில் நீதி வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டசபை தொகுதியில் அதிமுகவின் இன்பதுரை போட்டியிட்டு 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருந்தார்.

இன்பதுரை வெற்றி செல்லாது என அறிவிப்பு
தபால் வாக்குகள் எண்ணப்படாமல் இந்த வெற்றி அறிவிக்கப்பட்டதாக கூறி, இன்பதுரையின் இந்த வெற்றியை எதிர்த்து திமுக அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், இன்று இன்பதுரையின் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பளித்துள்ளது. தபால் வாக்குகள் அடிப்படையில் தற்போது 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள அப்பாவு, கால தாமதமான தீர்ப்பு என்றாலும் நீதி வென்றது எனவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டேன். வெற்றி வாய்ப்பை இழந்ததாக அப்போது அறிவித்தார்கள். அப்போது நான் தேர்தல் பெட்டிசனாக உயர்நீதிமன்றத்தில் தபால் வாக்குகள் 703 வாக்குகளை எண்ணாமல் தேர்தல் முடிவை அறிவித்துவிட்டார்கள். எனவே இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று இருந்தேன்.
இறுதியாக கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நான் தபால் வாக்குகளை எண்ணாமல் இருந்த வாக்குகளை எண்ணுவதற்கு ஏற்கனவே அக்டோபர் மாதம் 2019 ஆம் ஆண்டும் 1 ஆம் தேதி உத்தரவிடப்பட்டு, அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி 2019-இல் இந்த வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று அறிவித்து உள்ளனர்.
அனைத்து ஆவணங்களிலும்..
ஏற்கனவே இன்பதுரை தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்துள்ளது. தலைமைச் செயலகம் உள்பட அனைத்து ஆவணங்களிலும் இன்பதுரை பெயரை நீக்கிவிட்டு, 2016 முதல் 2021 வரை உள்ள காலக்கட்டத்தில் அவர் பெயர் உள்ள இடங்களில் எல்லாம் நீக்கிவிட்டு என்னுடைய பெயரை அப்பாவு பெயரை குறிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..
நீதி வென்றுள்ளது. கால தாமதம் என்றாலும், நீதி கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.. உண்மைக்கு புறம்பாக, நீதிக்கு புறம்பாக, அரசியலமைப்புக்கு விரோதமாக அதிகாரத்தை பயன்படுத்தி, அப்பாவுவை தூக்கி வெளியேற்றிவிட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது செல்லாது என்று இன்று நீதிமன்ற தீர்ப்பு அளித்து இருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கே தெரியும் எவ்வளவு முறை படி ஏறி இறங்கினோம் என்று, அவ்வளவு வலிகள்.. அனைத்திற்கும் இன்று விடை கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications