அப்சராவின் அடுத்த டர்ன் இதுதான்.. தவெகன்னு சொன்னாங்களே? அண்ணாமலையுடன் திடீர் சந்திப்பு
சென்னை: அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த அப்சரா ரெட்டி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் அரசியல்வாதியுமான அண்ணாமலையை சந்தித்து நீண்ட நேரம் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய கொஞ்ச நாட்களிலேயே நடந்துள்ள இந்த சந்திப்பு, அப்சராவின் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கொண்டிருந்த அளவுகடந்த மரியாதை மற்றும் அவரது அரசியல் சிந்தனைகள் மீதான நம்பிக்கையால் அரசியலுக்கு வந்தவர் அப்சரா.

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவால் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வந்தார்... அதேபோல அதிமுகவில் முக்கிய பொறுப்புகளையும் வகித்தார்.
பிறகு அதிமுகவில் இருந்து விலகி பாஜக சென்றார்.. அங்கிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.. காங்கிரஸில் மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பையும் வகித்தார். தேசிய அளவில் அந்த பதவியை வகித்த முதல் திருநங்கை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது...
2020 சட்டப்பேரவை தேர்தல்
2020 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடந்த ஜூலை 8-ம் தேதிதான் அவருக்கு அதிமுகவின் கொள்கைப்பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால், அந்த பொறுப்பு கிடைத்த ஒரு மாதத்திலேயே அதிமுகவில் இருந்து விலகுவதாக அப்சரா அதிரடியாக அறிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், தனது முடிவு எந்தவிதமான மனக்கசப்பாலும் தனிப்பட்ட வருத்தத்தாலும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
தனது மனசாட்சிக்கும், தான் நம்பும் கொள்கைகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார். அதேநேரம், தனது அரசியல் பயணம் வேறு பாதையில் சென்றாலும், மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கம் மாறாது என்றும் அப்சரா தெளிவுபடுத்தியிருந்தார்.
தவெகவில் இணைகிறாரா
அப்சராவின் விலகல் நடந்த இதே நேரம் சில கவனிக்கத்தக்க விஷயம் நடந்தது.. குறிப்பாக, அதிமுகவில் நீண்ட காலம் இருந்த சிங்கை ராமச்சந்திரன், கட்சியில் இருந்து விலகி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்த மறுநாளே அப்சராவும் அதிமுகவில் இருந்து விலகியிருந்தார்.. அதனால் அப்சராவும் அடுத்து தவெகவில் இணைய போகிறாரா என்ற கேள்வி எழுந்தது.
சில மீடியாக்களிலும் இதுதொடர்பான எதிர்பார்ப்பும் வெளியானது. ஆனால், தவெகவில் இணைவது குறித்து அப்சரா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான் இப்போது அண்ணாமலையை அப்சரா சந்தித்துள்ளார். சென்னையில் நடந்ததாக கூறப்படும் இந்த சந்திப்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு, கல்வி, சுற்றுச்சூழல், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.
அண்ணாமலையுடன் சந்திப்பு
இதனால், அப்சராவின் அடுத்த அரசியல் பாதை குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தவெக குறித்த பேச்சுகள் எழுந்த நிலையில் அண்ணாமலையுடனான சந்திப்பு நடந்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பை மட்டும் வைத்து அவர் எந்தக் கட்சியில் இணையப்போகிறார் என்று நாம் முடிவு செய்ய முடியாது.
ஜெயலலிதாவால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அப்சரா, ஏற்கெனவே அதிமுக, பாஜக, காங்கிரஸ் என வெவ்வேறு அரசியல் பாதைகளில் பயணித்துள்ளார். இப்போது மீண்டும் அதிமுகவில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்பதே தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்சரா பிளான் என்ன
ஒருவேளை அப்சரா, அண்ணாமலையின் அரசியல் இயக்கத்துடன் இணைந்தால், அது தவெக குறித்த எதிர்பார்ப்புக்கு மொத்தமான வேறான புதிய அரசியல் டர்னிங் பாயிண்ட்டாக இருக்கும்.
அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், அண்ணாமலையுடனான இந்தச் சந்திப்பு அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்த கேள்வியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூக பிரச்சினைகளில் அப்சராவுக்கு உள்ள அனுபவத்தை அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பும் உருவாகலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!


Click it and Unblock the Notifications
