ஏ.ஆர்.ரஹ்மானை விடுங்க.. கிளம்பிடுச்சு அடுத்த பூதம்.. "வரி கட்டலையாமே".. கோடம்பாக்கமே வெலவெலத்துடுச்சு
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சி தொடர்பான விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.. அடுத்த சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளதால், கோலிவுட்டே பரபரப்பாகிவருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி கடந்த 10-ந்தேதி நடந்தது. மறக்குமா நெஞ்சம் என்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் படையெடுத்து திரண்டு வந்தனர்.. ஆனால், வந்தவர்களுக்கு வேதனையும், குமுறலும், புலம்பலும், வெறுப்பும்தான் மிஞ்சியதாக சொல்லப்பட்டது..

டிக்கெட்கள்: டிக்கெட்டுகள் அதிகமாக விநியோகம் செய்ததால், 50 ஆயிரம் விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் சீட்டில், சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் இருந்ததாகவும், ஏற்பாடுகள் சரியில்லை என்றும், தண்ணீர், கார் பார்க்கிங் எதுவுமே சரியில்லை என்றும் புலம்பல்கள் வெடித்தன.
25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ரசிகர்கள் பெரும் சிரமப்பட்டுள்ளனர்.. பலர் அரங்கைவிட்டு வெளியேறிஉள்ளனர். இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம், இந்த நிகழ்ச்சி "மிகப்பெரிய ஸ்கேம்" என்ற சர்ச்சையான கருத்துகளை சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்தன..
டிக்கெட்டுகள்: 25 ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட அந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் 40,000-த்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றிருக்கிறார்கள் என்றும், எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழிகாட்டுதல், போலீஸ்பாதுகாப்பு, லைட் வசதிகள், வெளியேறும் வசதிகள் என எதையும் முறையாக ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என்றும் புலம்பல்கள் வெடித்தன.
கூட்ட நெரிசலில் சிக்கி வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் தவித்தனர்.. பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது.. இதனால் நிகழ்ச்சியை காணாமல் வெளியேறினால் போதும் என்கிற முடிவில் வெளியேற முயற்சித்தால் யாராலும் முடியவில்லை. இதனால் மக்களின் கோபமும் தாறுமாறாக வெடித்தது. இந்த நிகழ்ச்சியால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏகத்துக்கும் ஏற்பட்டது.
வாகன போக்குவரத்து: அதேசமயம், மாமல்லபுரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களோ, ரஹ்மானுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் எதிராக போலீசில் புகார் கொடுத்திருந்தனர்.
இதனிடையே, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏன் போடப்படவில்லை என்று டிஜிபி சங்கர் ஜூவாலிடம் ஸ்டாலின் கடிந்து கொண்டாராம்.. அதனாலேயே நிகழ்ச்சியில் நடந்துள்ள குளறுபடிகள், பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை தரச்சொல்லி தாம்பரம் போலீஸ் ஆணையர் அமல்ராஜுக்கும் உத்தரவிட்டிருந்ததாக தெரிகிறது..
வழக்கு பதிவு: அதேசமயம், ஏசிடிசி நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமந்த் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது மட்டும் தாம்பரம் காவல்துறை ஆணையரகத்துக்கு உட்பட்ட கானத்தூர் போலீஸ் ஸ்டேசனில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 406, 188 ஆகிய செக்சன்கள் போடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இது போன்ற இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால், சென்னை மாநகராட்சிக்கு எண்டர்டெயின் மெண்ட் டாக்ஸ் (பொழுதுப்போக்கு வரி) கட்டவேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.
எத்தனை டிக்கெட்டுகள்: அதாவது, எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டனவோ, அதன் மொத்த தொகையில் குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்த வேண்டும். ஆனால், இந்த வரியை ஏசிடிசி நிறுவனம் கட்டவில்லை. இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக சென்னை மாநாகராட்சி நிர்வாகமும் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம்.
இந்த விவகாரம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்வதால், விவகாரம் பெரிதாகாமல் இருக்க சினிமா துறையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர், அரசாங்கத்தை அணுகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications