வேளச்சேரில ஏன் வெள்ளம் வடியலைனு பார்க்க! இப்பயாவது ஒக்கியத்துக்கு ஓடுனீங்களே! அறப்போர் இயக்கம் நறுக்
சென்னை: வேளச்சேரியில் வெள்ள நீர் வடியாததற்கு காரணத்தை பொறுமையாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து தூர்வாரியவுடன்தான் அங்கு வெள்ளம் வடிந்தது என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த ஒக்கியம் மடுகு பகுதியில் உள்ள செடிகளை தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை சுட்டிக் காட்டி அறப்போர் இயக்கம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பல்லாவரம் பெரிய ஏரி கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கீழகட்டளை ஏரி கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. நாராயணபுரம் ஏரி கடல் மட்டத்தில் இருந்து 1 முதல் 2 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த ஏரிகளில் இருந்து நிரம்பி வரும் மழை நீர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து வரும் மழை நீர் அனைத்தும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை வந்தடைகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கிட்டத்தட்ட கடல் மட்டத்தின் அளவிலேயே அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் ஒக்கியம் மடுகு வழியாக பக்கிங்காம் கால்வாயை அடைந்து அங்கிருந்து முட்டுக்காடு வழியாக கடலை சென்றடைகிறது.
இந்த ஒக்கியம் மடுகு பகுதியில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட செடிகளை டிசம்பர் 7ம் தேதி சென்னை மாநகராட்சி அகற்றிக் கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக அக்டோபர் மாதத்தில் ஒரு முறை சுத்தம் செய்ததாகவும் சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது. அதாவது புயல் வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு சுத்தம் செய்திருக்கிறார்கள். வெள்ள நீர் வெளியேறுவதற்கு முக்கியமான இந்த பகுதியில் நிரந்தரமாக இயந்திரங்களை நிறுத்தி தினசரி தூர்வாரிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். ஆனால் வேளச்சேரி பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்ட பிறகு அங்கே ஏன் வெள்ள நீர் வடியவில்லை என்று பொறுமையாக ஆராய்ச்சி செய்து இந்த பகுதியை கண்டுபிடித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வந்துள்ளார்கள். இங்கே செடிகளை அகற்றிய பிறகு தான் வேளச்சேரி பகுதியில் வெள்ள நீர் முழுமையாக வடிய தொடங்கியது.
பல்லாவரம் பெரிய ஏரி கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கீழகட்டளை ஏரி கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. நாராயணபுரம் ஏரி கடல் மட்டத்தில் இருந்து 1 முதல் 2 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த ஏரிகளில் இருந்து நிரம்பி வரும் மழை நீர் மற்றும்… https://t.co/AgE6QictPD
— Arappor Iyakkam (@Arappor) December 9, 2023
இந்த இடத்தின் முக்கியத்துவம் குறித்து இன்றல்ல 2016ம் வருடத்திலேயே அறப்போர் இயக்கம் அதிமுக அரசுக்கும் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கும் ஆய்வறிக்கை https://arappor.org/activities/waterbodies/ அனுப்பியுள்ளது. அதை எல்லாம் படித்து பார்த்து முன் எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட்டிருந்தால் புயல் முடிந்தவுடன் வெள்ளத்தை வெளியேற்றி இருக்கலாம். மக்கள் இத்தனை இன்னல்களுக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள்.
வரலாறு காணாத மழை வந்தால் மக்கள் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும் என்று இனியும் சொல்லிக் கொண்டு இருக்காமல் எந்த மழை வந்தாலும் மக்களுக்கு எந்த இன்னல்களும் வராமல் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications