அந்த சொல்.. ராகுல் காந்தி பிரதமரா? நொந்து போன பாஜக.. திமுகவே எதிர்பார்க்கல.. கமலின் "நிறம்" மாறுதா?
சென்னை: கூட்டணி தொடர்பாக, கமல்ஹாசன் எடுத்த முடிவில் அதிர்ந்து போயிருக்கிறது மக்கள் நீதி மய்யம்.. இப்படிப்பட்ட சூழலில் கமல் தந்துள்ள ஒரு விளக்கம், ஒட்டுமொத்த தமிழக அரசியலின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
குட்டி குட்டி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2019 எம்பி தேர்தலை சந்தித்து, 3.78 சதவீத வாக்குகளை பெற்று, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் மநீம தலைவர் கமல்.. தமிழகத்தில் இப்படி கலக்கிய அதேசமயத்தில்தான், அந்தமானில் மக்கள் நீதி மய்யத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

சரிவுகள்: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், மய்யம் கணிசமான சரிவை நோக்கி போய்விட்டது... வாக்கு சதவீதமும் 2.62% ஆக குறைந்துவிட்டது.. கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், வேறு வேறு கட்சிகளுக்கு தாவி விட்டார்கள்.
அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், நிர்வாகிகளின் கட்சி தாவல்கள் போன்றவற்றால் கமல் சோர்ந்து போயிருந்த நிலையில்தான் விக்ரம் படம் புது தெம்பை தந்தது.. சினிமாவிலும் சரி, அரசியலும் சரி, ஒரு துடுப்புபோல இந்த படம் கமலுக்கு கை கொடுத்தது எனலாம்.. உதயநிதியின் தொடர்பால், திமுகவுடன் கூட்டணி என்ற சலசலப்பும் அந்த நிமிடம் முதல் வட்டமடிக்க துவங்கியது.
கூட்டணி முடிவு: கமலின் இந்த மாற்றம் குறித்து அரசியல் விமர்சகர்கள் நம்மிடம் சொன்னபோது, கடந்த தேர்தலிகளில் பெற்ற சறுக்கல்களை இந்த முறை பெறக்கூடாது என்பதில் கமல் உறுதியாக இருக்கிறாராம்.. இதற்காக தன்னுடைய கட்சியை பலப்படுத்துவதுடன், மற்றொருபக்கம் வலுவான கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால்தான், எதிர்கால அரசியலுக்கு நல்லது என்றும் முடிவெடுத்திருக்கிறாராம்.
ஆனால், அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே பாஜகவின் "பி டீம்" என்ற விமர்சனத்தை கமல்ஹாசன் சந்தித்து வருகிறார்.. கட்சி ஆரம்பித்ததும், இந்த விமர்சனம் அதிகமாகி கொண்டேதான் வருகிறது.. "பாஜகவின் சாயல், "பாஜகவின் நிழல்" என்ற பிம்பத்தை இப்போதுவரை கமலால் முழுமையாக ஒதுக்கி தள்ளவே முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
விமர்சனங்கள்: இந்த விமர்சனத்தை சுக்குநூறாக உடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கமல்.. கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்திருப்பதாகவும், அதனாலேயே திமுக கூட்டணி என்ற யோசனைக்கு வந்து, ராகுலுடன் 'கை' கோரும் சூழலுக்கு ஆளானதாகவும் சொல்கிறார்கள்.
கமலை பொறுத்தவரை, கேரள பினராயி முதல் டெல்லி கெஜ்ரிவால் வரை அனைவருடனும் இணக்கமான நட்பை கொண்டிருக்கும்நிலையில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க, கமல் முயலலாம் என்றும் சொல்கிறார்கள்.. இந்த முயற்சியைதான், அன்று சந்திரபாபு நாயுடு முதல் மம்தா பானர்ஜி வரை முன்னெடுத்தனர்.
பிரபலமான மனிதர்: அதே ரூட்டை கமலும் முன்னெடுக்கும் பட்சத்தில், தேசம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் என்பதால், பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு பலம் கிடைக்கும் என்றே நம்பப்பட்டது. தேசிய அளவில், கமலுக்கு இது உதவுகிறதோ இல்லையோ, காங்கிரசுக்கு நிச்சயம் உதவும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதினார்கள்.
அந்தவகையில், திமுகவுடன் கூட்டணி வைத்து, கமலுக்கு சீட் ஒதுக்கப்படும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், எல்லாவித கணிப்புகளும் தகர்ந்துவிட்டன. முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைப்பதால் தனக்குரிய கவுரவம் தருவார்கள் என்று கமல்ஹாசன் எதிர்பார்த்தார்.. ஆனால் நடக்கவில்லை.. 10 சீட்டையும் பெற்றுக் கொண்ட காங்கிரஸ், கமலுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காதது சற்று அதிர்ச்சிதான் என்கிறர்கள்..
அதிரடி கமல்: மேல்-சபை எம்.பி. பதவியை பெற்றுக்கொண்ட நிலையில், தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு என்ற விளக்கத்தை கமல் தந்தாலும், மய்யத்தினர் கொதிப்பு இன்னமும் அடங்கவில்லையாம்.
திமுக கூட்டணிக்கு தற்போது ஆதரவு திரட்ட கமல் இறங்கியிருக்கிறார்.. ஆனால், மநீம மாவட்ட நிர்வாகிகளோ, கட்சி இருந்தால் தானே கட்சிக்காரர்களை திரட்டுவது? எங்களால் முடியாது என்று ஒதுங்கிக் கொள்கிறார்களாம்.. பல மாவட்டங்களிலும் மய்யத்தின் ஆட்கள் ஒதுங்குவதாக தகவல்கள் கசிகின்றன.
விமர்சனங்கள்: இப்படிப்பட்ட சூழலில்தான் கமல்ஹாசன் மீண்டும் ஒரு விளக்கத்தை தந்திருக்கிறார்.. "மக்கள் நீதி மய்யம் கட்சியை தனித்துவமாக நடத்துவதாக சொல்லிவிட்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டதாக என்னை விமர்சிக்கிறார்கள்... அதை பற்றி கவலையில்லை. இதற்கு முன்பு கூட பல்வேறு மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் ஓரணியில் இணைந்து இருக்கிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரு சக்தி மக்களை பிளவுப்படுத்த நினைக்கிறது. அதுவும் மனிதர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் கடப்பாரையை வைத்து குத்தி பிளவு ஏற்படுத்துகின்றனர். அதனால்தான், அதற்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் நான் திமுக கூட்டணியில் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன்.
கொள்கை : நான் நினைத்திருந்தால் தொகுதி பங்கீடு நடந்தபோது 3 அல்லது 4 சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். திமுக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்ற என்ற கொள்கை அடிப்படையில் நான் அதை செய்யவில்லை. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க ஒருவர் தேவை. அதற்கு ராகுல்காந்தி பொருத்தமானவர் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் கமல்.
திமுக மட்டுமல்லாமல் எப்போதும் போல காங்கிரஸை உயர்த்தி பிடித்தி கமல்ஹாசன் பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. திமுக ஒதுக்கும் தொகுதியில் கமல் போட்டியிட்டு, தங்களுக்கு வரக்கூடிய "பெரும்பான்மையினர்" வாக்குகளை தன்பக்கம் திருப்பிவிடுவாரோ என்ற கலக்கம் பாஜக தற்போது இல்லாவிட்டாலும், கமலின் பேச்சுக்கள் பாஜக தரப்புக்கு எரிச்சலை தந்து கொண்டிருக்கிறதாம்.
மய்யம் முடிவு: ஆக, கமல் இந்த அளவுக்கு தெளிவான விளக்கத்தை தந்துள்ளதால், மய்யத்தின் மனம் அமைதி பெறும் என்றே தெரிகிறது.. அதிருப்திகளையும், ஏமாற்றத்தையும் தூக்கி தூரப்போட்டுவிட்டு, திமுக கூட்டணிக்காக மக்கள் நீதி மய்யத்தினரும் களப்பணியாற்ற வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
அதைவிட முக்கியமாக, "பாஜகவின் B டீம்" என்ற பிம்பமும் கமலிடம் இருந்து, இனி முழுமையாகவே கழண்டு விழுந்துவிடும் என்றும் வலுவாகவே நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications