3 மேட்டர்.. எடப்பாடியின் மாஸ்டர் பிளான்.. டக்கென திரும்பும் திமுக, பாஜக, ஓபிஎஸ்.. 25-ம் தேதி மெசேஜ்?
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள போராட்டத்துக்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன
சென்னை: அதிமுக அறிவித்துள்ள போராட்டங்களுக்கு பின்னணியில் 3 காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.. மேலும், நாளை மறுநாள் நடக்க போகும் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாகி வருகின்றன.
திமுக ஆட்சிக்கு வந்தது முதலே ஏராளமான அதிரடிகளை அறிவித்து வருகிறது.. மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
நிதி நெருக்கடிக்கு அரசு உள்ளாகியிருந்தபோதிலும், இவைகளை மிகுந்த சிரமத்துடன் அறிவித்தது, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.. அதேபோல, தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைய நிறைவேற்றி விட்டதும் கவனிக்கத்தக்கது.

பாஜக அதிரடி
ஆனாலும், திமுக அரசு மீது விமர்சனங்களும் உள்ளன.. ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகளான பாஜக அதிமுக, திமுகவை குறை சொல்லியும், விமர்சித்தும் வந்தன.. ஆனால், நாளடைவில் பல்வேறு வரிகளை திமுக உயர்த்திய வண்ணம் உள்ளது, கவலையை மக்களிடம் உண்டாக்கி வருகிறது.. வீட்டு வரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவைகளை தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.

பூசல்கள்
வழக்கமாக, திமுகவை கண்டித்து பாஜக மட்டுமே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை அறிவித்து வந்த நிலையில், தற்போது அதிமுகவும் போராட்டம் அறிவித்துள்ளது.. கடந்த 6 மாத காலமாகவே, சொந்த கட்சியில் பல்வேறு குழப்பங்கள், சர்ச்சைகள், பூசல்கள் வெடித்து வந்ததாலும், ரெய்டுகள், கேஸ்களை எதிர்கொள்ள வேண்டி வந்ததாலும், திமுக அரசை எதிர்க்க முடியாத நிலைமை அதிமுகவுக்கு வந்தது.. இப்போது அதிமுக இரண்டாகவே பிளவுபட்டுள்ளது.

சிக்கல்கள் - சூழல்
எனினும், அதிமுக மேலும் பலவீனப்பட்டுவிடக்கூடாது என்ற கலக்கம் சீனியர் தலைவர்களை சூழ்ந்துள்ளது.. அந்த வகையில், வரும் 25-ம் தேதி திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. புது பதவி, பொறுப்பு என்று மட்டுமே இல்லாமல், அவைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கவே இந்த ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாம்..

எடப்பாடி செக்
ஒருபக்கம் ஓபிஸ்எஸுக்கு தன்னுடைய கெத்தை காட்டிக் கொண்டே திமுகவுக்கும் செக் வைக்க வேண்டும் என்பதே இதன் எண்ணம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, "நாங்களும் களத்தில் இருக்கிறோம், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக மட்டுமே" என்பதை பாஜகவுக்கு காட்டவும்தான் இந்த ஆர்ப்பாட்டமாம்.

முட்டல் - மோதல்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மிக தீவிரமாக இறங்கி இருப்பது எஸ்பி வேலுமணிதானாம்.. காரணம், மின்கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதால், இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.. ஏற்கனவே, ஒரே மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜியுடன், நேரடி மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தை வைத்து தன்னுடைய கெத்தையும் பிரம்மாண்டத்தையும் காட்ட நினைக்கிறாராம் வேலுமணி.. இதற்காகவே, நேற்றைய தினம், நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்திஉள்ளார்.

வலிக்க போகிறது
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, "ஒரு பிரச்சினையை மறைக்க இன்னொரு பிரச்சினையை கிளப்பி விடுவது தான் திமுகவின் வேலை.. கோவையில் அதிமுக சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.. சொத்துவரி மற்றும் மின்கட்டண உயர்வு ஆகியவற்றை உயர்த்தி மக்கள் விரோத ஆட்சியை திமுக தந்து கொண்டிருக்கிறது, இனிமேல் தான் திமுக அரசு உயர்த்தியுள்ள வரிகளின் வலி என்ன என்பது மக்களுக்கு தெரிய போகிறது.. இனி வரி சீராய்வும் செய்யப் போகிறார்கள்.. அவ்வாறு செய்தால் ஆயிரம் ரூபாய் செலுத்தியவர்கள் இனி 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை வரும்.

டெக்னிக்
மத்திய அரசின் மீது பழி போட்டு இப்போது மின் கட்டணம் ஏற்றப்பட்டுள்ளது, வீட்டில் இரண்டு தளங்கள் இருந்தால் கீழ் தளத்திற்கு தனி ஒரு இணைப்பும், மேல் தளத்திற்கு தனி இணைப்பும் வழங்கப்பட்டு வந்தது.. ஆனால் இனிவரும் காலங்களில் ஒரே இணைப்புதான் என கூறுகிறார்கள், 100 யூனிட் இலவச மின்சாரம் இனிமேல் இருக்காது, திமுக ரொம்ப டெக்னிக் ஆக மக்களை மோசடி செய்கிறது" என்றார். எப்படி பார்த்தாலும் நாளை மறுநாள் நடக்க போகும் ஆர்ப்பாட்டம், ஓபிஎஸ் + திமுக + பாஜக ஆகிய 3 தரப்புக்குமே ஷாக் தரும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications