பிரபல நடிகர் "நம்பியார்".. அதைவிடுங்க.. பாஜக சொன்னதுமே, டக்குன்னு "தலையாட்டிய" ஓபிஎஸ்ஸின் யூடர்ன்
சென்னை: தமிழகத்தில் வாக்கு வங்கியை பெற பாஜக தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.. இதற்காக கூட்டணி விஷயத்தையும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்த ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.
ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே, திமுகவை எதிர்க்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளது பாஜக.. அதனால்தான், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க, 2 மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோதுகூட, இதே விஷயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்ஸூடன் இணக்கமாக சேர்ந்து, தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அமித்ஷா தரப்பிலும் வலியுறுத்தப்பட்டபோது, எடப்பாடியோ மறுபடியும் அதை மறுத்துவிட்டாராம்.

ஓபிஎஸ் பிளான்: கட்சி முழுமையாக தன்னிடம் வந்து விட்டது. அவர்களை சேர்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக மேலிடத்திலேயே சொன்னாராம்.. அதுமட்டுமல்ல, தாங்கள் மட்டுமே அதிமுக என்பதால் ஓபிஎஸ் தரப்பிடம் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும், ஓபிஎஸ் தரப்பினரை சந்திப்பது உள்ளிட்டவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.
நிருபர்கள் கேள்வி: டெல்லியில் இந்த பேச்சுவார்த்தை முடித்துவிட்டு, செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.. அப்போது, "ஓபிஎஸ் மனம் மாறி வந்தால் அவரை கட்சியில் இணைத்து கொள்வீர்களா?" என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்..
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஏற்கனவே பலமுறை இதை நான் சொல்லிவிட்டேனே.. ஒருசிலரை தவிர்த்து, அதிமுக மீது நன்மதிப்பு வைத்து, மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விசுவாசமிக்கவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் கட்சிக்கு வரலாம்.. இந்த கட்சிக்கு துரோகம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்த கட்சியில் இடமில்லை.. அதுல யார் யார் இடம்பெற மாட்டார்கள் என்பதை நீங்களே யோசனை பண்ணிக்குங்க" என்றார்.. ஆக, அதே உறுதியுடன் எடப்பாடி பழனிசாமி இப்போதும் உள்ளதாக தெரிகிறது.
பேட்டிகள்: இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, "எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை... ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை, அவர்கள் நமக்கு கற்பித்துவிட்டனர்.. நான்கரை வருடத்தில் எவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்துவிட்டனர். எம்ஜிஆர் நமக்கு அளித்த உரிமையை பறிக்க இந்த பழனிசாமி யார்? என்று கேட்டிருந்தார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்ஸை சேர்க்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிவரும் நிலையில், எடப்பாடியுடன் சேரமாட்டேன் என்று ஓபிஎஸ் இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளார்.. அதே நேரம் மோடிதான் பிரதமர்.. பாஜக கூட்டணியில் இடம் பெறுவோம் என்றும் சொல்லி வருகிறார். இதுதான் பாஜகவுக்கு இப்போது தலைவலியை கூட்டி வருகிறது. இதுவரை ஒருதரப்பை சமாதானப்படுத்தி வந்த நிலையில், இப்போது 2 தரப்பையுமே சமாதானப்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
40 தொகுதிகள்: கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது.. இதற்கு முக்கிய டிடிவி தினகரன் கட்சி வாங்கிய ஓட்டுகள் தான். மேலும் திமுக - அதிமுக இடையேயான வாக்குவித்தியாசம் ஒரு சதவீதம்தான். அதனால்தான் வருகிற எம்பி தேர்தலில், பிரிந்தவர்களை எல்லாம் ஒன்று சேர்க்க பாஜக மேலிடம் நினைக்கிறது.
டிடிவி தினகரன்: அதேபோல தினகரனும் அதிமுகவை ஏற்க மாட்டார் என்றே சொல்கிறார்கள்.. சின்னம் தொடர்பான தீர்ப்பு வந்தபோது டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார். அதில், "எம்ஜிஆர் கையில் இருந்த இரட்டை இலை, இப்போது நம்பியார் கைக்கு போய்விட்டது" என்பது முதல் பச்சை துரோகம் பழனிசாமி வரை லிஸ்ட் போட்டு தாக்கி விமர்சித்திருந்தார். தினகரன்.
இப்படிப்பட்ட சூழலில், நாளை 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி அமைப்பது, கூட்டணி அமைக்க பாஜகவுடன் விதித்துள்ள நிபந்தனைகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்படுவதாக தெரிகிறது..
நிபந்தனை: எப்படிப்பார்த்தாலும், ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + சசிகலா இணைப்பு உள்ளிட்ட எந்த நிபந்தனைகளையும் பாஜக விதிக்கக்கூடாது, நிபந்தனையற்ற முறையில் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.












Click it and Unblock the Notifications