கிளைமேட்டே மாறுதே.. "4 ராஜாக்கள்".. ஆட்டத்தை கலைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இனிமேல் "வேட்டை"தான் போல
சென்னை: அசைக்க முடியாத இடத்தில், தன்னுடைய அங்கீகாரத்தை தக்க வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்த வியூகங்களை கையில் எடுத்துள்ளார். இந்த நிகழ்வினை ஓபிஎஸ் மட்டுமல்லாமல், அமமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் உற்று கவனித்து வருகின்றன.
மதுரையில் மாநாட்டினை நடத்துவதற்கு, நாலாபக்கமிருந்தும் நெருக்கடிகளும், முட்டுக்கட்டைகளும் வந்தாலும், ஒருவழியாக மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துக்காட்டிவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..

முக்குலத்தோர்: ஏற்கனவே முக்குலத்தோர்களின் அதிருப்தியை எடப்பாடி பழனிசாமி அதிகமாகவே சம்பாதித்து வைத்துள்ளதால், மதுரை மாநாட்டில் உரையாற்றும்போது, ஓபிஎஸ் பற்றியோ, தினகரன் பற்றியோ, சசிகலா பற்றியோ வாயே திறக்கவில்லை..
வழக்கமாக எங்கே பேசினாலும், இவர்களை கடுமையாக விமர்சிப்பவர், மதுரை மாநாட்டில் மட்டும் அவ்வளவாக, தாக்கி பேசவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
புளிசோறு: "புளிசோறு" பஞ்சாயத்து வந்தாலும்கூட, மதுரை மாநாடு என்னமோ மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.. போதாக்குறைக்கு பொதுக்குழு தீர்ப்பும் சாதகமாக வந்துள்ளது எடப்பாடிக்கு கிடைத்த 2வது வெற்றியாக பார்க்கப்படுகிறது.. இதை தீர்ப்பு என்று சொல்வதைவிட, எடப்பாடிக்கு சாதகமான முடிவு என்று சொல்லலாம்.. இது எடப்பாடிக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரமாக கருதப்படுவதுடன், ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த பின்னடைவாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.
மூன்றாவதாக, முக்குலத்தோரின் ஆதரவை பெறுவதற்கான அடுத்தக்கட்ட நகர்வை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. எம்பியாகவும், எம்எல்ஏவாகவும் பணியாற்றி, அரசியலின் மூத்த தலைவராக திகழ்ந்து, கல்விப்பணியில் பல சேவைகளை செய்து, பொதுச்சேவைகள் பல புரிந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, பி.கே. மூக்கையாத் தேவரின் 44-ஆவது நினைவு நாள் நாளை மறுநாள் அதாவது 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
நினைவுநாள்: இந்த நினைவுநாளுக்கு 7 பேர் கொண்ட டீமை அனுப்பி, அதிமுக சார்பில் வீர அஞ்சலி செலுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிகழ்வுக்கு வழக்கம்போல் ஓபிஎஸ் செல்வார் என்றாலும், தன்மீதான முக்குலத்தோரின் ஆதரவு இதன்மூலம் மேலும் தணியும் என்று கணக்கு போடுகிறாராம் எடப்பாடி.
நான்காவதாக, அதேபோல, எம்பி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் இரண்டையும் கணக்கில் கொண்டு, அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதன்படி, அதிமுகவில் தலா 2 சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலரை நியமிக்க போகிறாராம்..
புதுமுகங்கள்: அந்தவகையில், மொத்தம் 117 மாவட்ட செயலர்களை நியமிக்க எடப்பாடி திட்டமிட்டு வருகிறாராம்.. குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, தஞ்சாவூர், மதுரை, நாமக்கல், கோவை உள்ளிட்ட பல மாட்டங்களில், மாவட்ட செயலாளர்கள் கட்டுப்பாட்டில், 3 முதல் 6 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.
எனவே, அவர்களிடமிருந்து தொகுதிகளை பிரித்து, புதுமுகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவிகளை வழங்கினால், அவர்கள் ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் எடப்பாடி நம்புகிறாராம்..
அதுமட்டுமல்ல, 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றால், 117 மாவட்ட செயலர்களும், தலா ஒரு தொகுதியில் வெற்றி கிடைத்தலே போதும், அதிமுக அரியணையில் உட்கார்ந்துவிடும் என்றும் கணக்கு போடுகிறாராம்.
2வது இன்னிங்ஸ்: ஓபிஎஸ் ஒருபக்கம் புரட்சிப்பயணத்தை துவங்கி உள்ளார்.. 40-க்கு 40-லும் வெற்றி பெறுவோம் என்று மூத்த தலைவர் பண்ருட்டியார் சொல்லி வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில், "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறைக்கு முதல் நபராக ஆதரவை தந்து, பாஜகவுடன் மேலும் இணக்கமாகிஉள்ள எடப்பாடி பழனிசாமி தன்னுடைய, 2வது இன்னிங்ஸை அடித்து ஆட துவங்கி உள்ளார்.. அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications