தாம்பரம் டூ செங்கல்பட்டில் சொந்த வீடு வாங்க போறீங்களா.. களிமண் நிலமா.. பில்டர்கள் சொல்லாத உண்மை
சென்னை: சொந்த வீடு வாங்குவோர் கழிவு நீர் வெளியேறும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் காலத்திற்கும் கஷ்டம் தான் ஏற்படும். ஏனெனில் இன்றைக்கு ஆள் இல்லாத காடு அல்லது சரியாக வீடுகள் கட்டப்படாத இடத்தில் வீடுகள் வாங்கும் போது, கழிவு நீரை தேக்கக சிறிய அளவில் அகழி தொட்டி பாணியில் கட்டிக் கொடுக்கிறார்கள். அது நிறைந்தால், கழிவுநீரை பக்கத்து பிளாட்டில் கூட சிலர் விடுகிறார்கள். ஆனால் அது பின்னாளில் சிக்கலையே ஏற்படுத்தும். செங்கல்பட்டு மாவட்டத்தில் குறிப்பாக காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் இந்த பிரச்சனை அதிக அளவில் இருக்கிறது.
சொந்த வீடு வாங்குவது ஒருவரின் வாழ்நாள் சாதனை. ஆனால், அந்த வீட்டில் குடியேறிய பிறகு, நாம் பயன்படுத்தும் சோப்புத் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் வீட்டு வாசலிலேயே தேங்கி நின்றால், அந்தச் சாதனை வேதனையாக மாறிவிடும். குறிப்பாக, செங்கல்பட்டு, மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் போன்ற களிமண் நிலங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வாங்குவோர், ஒரு முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.

தண்ணீர் வெளியேற தொட்டி
பொதுவாக வீடுகளில் மலம் கழிக்கத் தனியாகச் செப்டிக் டேங்க் அமைத்துவிடுகிறோம். ஆனால், குளிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரை வெளியேற்ற 'உறிஞ்சு குழி' என்ற அமைப்பைத் தான் பெரும்பாலான பில்டர்கள் அமைத்துக் கொடுக்கிறார்கள். ஒரு சிறிய 3-க்கு 6 அடி தொட்டியை அமைத்து, அது நிலத்திற்குள் நீரை உறிஞ்சிவிடும் என்று சொல்லி வீடுகளை விற்கிறார்கள்.
களிமண் நிலம்
ஆனால் நீங்கள் வாங்கியிருக்கும் நிலம் களிமண் பாங்கானது என்றால், அங்குதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. களிமண் நிலத்திற்கு நீரை உள்வாங்கும் தன்மை மிக மிகக் குறைவு. ஒரு சாதாரணக் குடும்பம் ஒரு நாளைக்குக் குறைந்தது 400 முதல் 500 லிட்டர் தண்ணீரை உபயோகிக்கிறது. இந்த நீர் அந்தச் சிறிய தொட்டியில் சேரும்போது, களிமண் அதை உறிஞ்ச மறுப்பதால், ஒரே வாரத்தில் தொட்டி நிறைந்து வெளியே வழியத் தொடங்கிவிடும்.
லாரி மூலம் வெளியேற்ற வேண்டும்
இதனால் வீட்டு வாசலிலேயே சோப்புத் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும். தொட்டி நிறைந்ததும் அதை லாரி மூலம் வெளியேற்ற அடிக்கடி செலவு செய்ய வேண்டியிருக்கும். இது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறிவிடும்.
முறையான கால்வாய் வசதி
முறையாகக் கால்வாய் வசதி இல்லாத இடங்களில், இந்தத் தண்ணீர் அண்டை வீட்டார் இடத்திற்கோ அல்லது பொதுச் சாலைக்கோ செல்லும்போது தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாகி வருகின்றன. சரியாக பைப்புகள் அமைத்து தண்ணீர் வெளியேற்றி தராமல் பில்டர்கள் விட்டுவிடுவதால் பின்னாளில் சிக்கலாகி விடுகிறது.
அரசு பாதாளச் சாக்கடை அல்லது கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தரும் வரை, களிமண் நிலத்தில் இருப்பவர்கள் 'உறிஞ்சு குழி'க்கு மாற்றாகப் பெரிய அளவிலான அகழி முறையையோ (Leach Field) அல்லது அந்தத் தண்ணீரைச் சுத்திகரித்துத் தோட்டத்திற்குப் பயன்படுத்தும் முறையையோ கையாள வேண்டும். வீடு வாங்கும் முன்பே, அந்த நிலத்தின் தன்மை என்ன? கழிவுநீர் வெளியேற முறையான பொதுக் கால்வாய் வசதி இருக்கிறதா? என்பதைச் சோதிப்பது அவசியம். இல்லையென்றால், நீங்கள் வாங்கும் கனவு இல்லம், கசிவுநீரால் கண்ணீர் இல்லமாக மாறும் அபாயம் உள்ளது. என்னதான் நல்ல நிறுவனம், நல்ல நிலம், விலை மதிப்புள்ள இடம் என்றாலும், கழிவுநீர் வெளியேற சரியான சாக்கடை வசதிகள் செய்திருப்பதை உறுதி செய்யுங்கள். சாக்கடை வசதி அமைத்து தராத எந்த இடத்தையும் வாங்காதீர்கள். அது பெரிய சிக்கலில் போய்விடும்.












Click it and Unblock the Notifications