திமுக - பாஜகவை மட்டும் தான் திட்டுவீங்களா? விஜய் பேச்சால் தவெகவின் நடிகர் தாடி பாலாஜி அதிருப்தி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் நடிகர் விஜயின் பேச்சால் அந்த கட்சியில் இருக்கும் நடிகர் தாடி பாலாஜி கடும் அதிருப்தியடைந்துள்ளார். பாஜக, திமுகவை மட்டும் தான் திட்டுவீங்களா? என கேள்வி எழுப்பி உள்ளா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடந்தது. மதுரை பாரபத்தியில் இந்த மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் ‛ரேம்ப் வாக்' செய்து மேடைக்கு வந்து பேசினார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பலரும் விஜயை பார்த்த மகிழ்ச்சியில் ‛ரேம்ப் வாக்' மேடையில் ஏறினர்.
ஸ்டாலின் அங்கிள் எனக்கூறிய விஜய்
நடிகர் விஜய் இந்த மாநாட்டில் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். முதல்வர் ஸ்டாலின் பெயரை நேரடியாக குறிப்பிட்டு பேசிய விஜய், ‛‛ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கபட நாடகமாடும் திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.
"ஸ்டாலின் அங்கிள்.. வாட்ஸ் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள். அங்கிள்.. அங்கிள்.. உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்துச்சுன்னா.. நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க அங்கிள்.. நீங்கள் நடத்துகிற ஆட்சியில் நேர்மை இருக்கா'' என்று விமர்சனம் செய்தார்
பாஜக பற்றி பேசியது என்ன?
பாஜகவை விமர்சனம் செய்யும்போது, ‛‛அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி. என்னதான் நீங்கள் நேரடி - மறைமுகமாக கூட்டணி என்று குட்டிக்கரணம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாதபோது தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவாங்க.. இங்க ஒரு எம்பி சீட் கூட தரவில்லை என்பதற்காக தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும், எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது இந்த பாஜக அரசு.
சங்கம் வளர்த்து தமிழை வளர்த்தது இந்த மதுரை மண். அதனால் கீழடியில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் அழித்துவிட்டு எங்களின் நாகரீகம், வரலாற்றையும் அழிக்கிறதுக்கு உள்ளடி வேலை செய்கிறீர்கள். தமிழ்நாட்டை தொட்டால் என்ன நடக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது. மீண்டும் சொல்கிறேன் பாஜக எங்களின் கொள்கை எதிரி. திமுக எங்களின் அரசியல் எதிரி'' என்று பேசியிருந்தார்.
தாடி பாலாஜி ஸ்டேட்டஸ்
இந்நிலையில் தான் நடிகர் விஜயின் இந்த பேச்சால் நடிகரும், தவெக கட்சியை சேர்ந்தவருமான தாடி பாலாஜி கடும் அதிருப்தியடைந்துள்ளார். நடிகர் விஜய் தவெகவை தொடங்கியதும் தாடி பாலாஜி அந்த கட்சியில் சேர்ந்து கொண்டார்.
நேற்றைய மதுரை மாநாட்டை தொடர்ந்து நடிகர் தாடி பாலாஜி தனது வாட்ஸப்பில் வைத்த ஸ்டேட்டஸ் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தாடி பாலாஜி தவெகவில் சேர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் அவர் தனது வாட்ஸப் ஸ்டேட்டஸில், ‛‛ தமிழகத்தை காக்க வந்த தலைவா! முதலில் உங்களுடன் இருப்பவர்களிடமிருந்து உங்களை காப்பாற்ற வேண்டும்.. இப்படிக்கு நண்பன்'' என தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பியது.
தவெக வழக்கு தொடர வேண்டியது தானே
இந்நிலையில் தான் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி கேள்வி கேட்ட தனியார் தொலைக்காட்சி நிருபருக்கு தாடி பாலாஜி செல்போன் வழியாக அளித்த பேட்டியில், ‛‛அஜித் குமார் கொலை வழக்கில் அவரது வீட்டுக்கு விஜய் நேரடியாக சென்றார். அஜித் குமார் கொலை, கவின் கொலை பற்றி பேச வேண்டும். திருப்பி திருப்பி கச்சத்தீவு மீட்கிறது.. நீட் விலக்கு கோருவது என்று சொன்னால்? உச்சநீதிமன்றம் தான் தீர்ப்பு கொடுத்து விட்டதே. தவெக சார்பில் வழக்கு தொடர வேண்டியது தானே!
மீண்டும் மீண்டும் திட்டுவீங்களா?
மீண்டும் மீண்டும் திமுக, பாஜகவை திட்டி கொண்டே இருக்கிறீர்கள். ஓட்டு திருட்டு என்று ராகுல் காந்தி கூறியது பற்றி பேச வேண்டும்.ஏன் பேசவில்லை. நான் வந்தால் என்ன பண்ணுவேன் என்று பேச வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. தேர்தல் வியூகம் என்ன? பிரசாரம் எப்படி செய்யப்போகிறோம்? மாதிரி செய்யப்போகிறோம். நம் கொள்கைகளை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க போகிறோம் என்பது பற்றி பேசி தலைவர் (விஜய்) தூள் கிளப்ப வேண்டும்.
ரசிகராகவே இருக்காங்க
நேற்று ரேம்ப் வாக்கில் நடந்து வந்தவுடன் அனைவரும் கிளம்பி விட்டனர். தலைவர் பேசுவாரு.. அதை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. விஜய் சாரை பார்க்க வந்தேன். பார்த்து விட்டேன். கிளம்பிட்டேன் என்று இருக்கிறார்கள். இவனுங்க இன்னும் ரசிகர்களாகவே இருக்காங்க.. விஜய் ஒரு மீட்டிங்கை Sudden ஆக முடிக்கிறார். அப்படி செய்யக்கூடாது'' என்று ஆதங்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications